BWF உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டனில் வெண்கலம் வென்றார் பிரணாய் எச்.எஸ்.
2023 BWF உலக சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரணாய் எச்.எஸ். வெண்கலம் வென்றார். சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) நடந்த அரையிறுதிப் போட்டியில் தாய்லாந்தின் 22 வயதே ஆன குன்லவுட் விடிட்சார்னை எதிர்த்து விளையாடிய 31 வயதான பிரணாய் எச்.எஸ். முதல் சுற்றில் போராடி 21-18 என வென்றார். முதல் சுற்றில் அதிகம் தற்காப்பு ஆட்டத்தை விளையாடிய குன்லவுட் விடிட்சார்ன் அடுத்தடுத்த சுற்றில் தாக்குதல் ஆட்டத்திற்கு மாறி, பிரணாயை திணறடித்தார். இதன் மூலம், பிரணாய் 13-21, 14-21 என அடுத்த இரண்டு சுற்றுகளையும் இழந்து தோல்வியைத் தழுவி வெண்கலம் வென்றார். மேலும், 2011 முதல், உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் குறைந்தபட்சம் ஒரு பதக்கம் வென்ற இந்தியாவின் சாதனையை நீட்டித்துள்ளார்.
உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்லும் ஐந்தாவது இந்திய ஆடவர் ஒற்றையர் வீரர்
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் தனது முதல் பதக்கத்தை வென்ற பிரணாய், இதில் பதக்கம் வென்ற ஐந்தாவது இந்திய ஆடவர் ஒற்றையர் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக, கிடாம்பி ஸ்ரீகாந்த் (வெள்ளி), லக்ஷ்யா சென் (வெண்கலம்), பி சாய் பிரனீத் (வெண்கலம்), பிரகாஷ் படுகோன் (வெண்கலம்) ஆகியோர் பதக்கம் வென்றுள்ளனர். மேலும், மகளிர் ஒற்றையர் பிரிவில், பிவி சிந்து 2019ல் ஒரு தங்கம் உட்பட ஐந்து ஒற்றையர் பதக்கங்களையும், சாய்னா நேவால் (வெள்ளி மற்றும் வெண்கலம்) இரண்டையும் வென்றனர். அதே நேரத்தில், பெண்கள் இரட்டையர் ஜோடியான ஜ்வாலா குட்டா மற்றும் அஷ்வினி பொன்னப்பா 2011 இல் வெண்கலம் வென்றனர் மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக்ஷெட்டி ஜோடி 2022இல் வெண்கலம் வென்றது.