டிராவில் முடிந்த ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி; விதர்பா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டது எப்படி?
செய்தி முன்னோட்டம்
ரஞ்சி கோப்பை 2024-25 சீசனின் இறுதிப் போட்டி டிராவில் முடிந்த நிலையில், விதர்பா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அந்த அணி ரஞ்சி கோப்பை வெல்வது இது மூன்றாவது முறையாகும்.
முன்னதாக, நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், அக்ஷய் வாட்கர் தலைமையிலான விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் 379 ரன்கள் எடுத்தது.
பதிலுக்கு, சச்சின் பேபி தலைமையிலான கேரளா அணி 342 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் 37 ரன்கள் முன்னிலை பெற்ற விதர்பா, இரண்டாவது இன்னிங்ஸில் 375 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஐந்து நாட்கள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
கேரளா
வரலாற்று வாய்ப்பை இழந்த கேரளா
போட்டி டிராவில் முடிந்த நிலையில், விதிமுறைகளின் படி, இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பெற்ற 37 ரன்கள் முன்னிலை மூலம், விதர்பா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
விதர்பா அணி இதற்கு முன்னர் 2017-18 மற்றும் 2018-19 ஆகிய சீசன்களில் பட்டத்தை வென்றிருந்த நிலையில், இது அவர்களுக்கு மூன்றாவது பட்டமாகும்.
விதர்பா அணியின் பந்துவீச்சாளர் ஹரீஷ் துபே ரஞ்சி கோப்பையின் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கிடையே, கேரளா அணி ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில், அதை வென்று தனது முதல் ரஞ்சி கோப்பை பட்டத்தை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது.