INDvsNZ 2வது டெஸ்ட்: 12 வருட சாதனையை முறியடிக்கப் போவது இந்தியாவா? நியூசிலாந்தா?
சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 வருடங்கள் யாராலும் வெல்ல முடியாத அணியாக வலம் வந்த இந்திய கிரிக்கெட் அணி, அந்த சாதனையை இழக்கும் தருவாயில் நிலையில் உள்ளது. 2012இல் இங்கிலாந்திடம் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்த பிறகு, சொந்த மண்ணில் இந்திய அணி எந்த ஒரு டெஸ்ட் தொடரையும் இழந்ததில்லை. ஆனால் நியூசிலாந்து கிரிக்கெட் அணி அதை மாற்றி மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. இந்த போட்டியின் இரண்டாம் நாள் (அக்டோபர் 25) ஆட்டநேர முடிவில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 301 ரன்கள் பின்தங்கியுள்ளது. நியூசிலாந்து அணியின் பேட்டிங் இன்னும் முடியாத நிலையில், இந்தியாவுக்கான வெற்றி இலக்கு மேலும் அதிகரிக்கும்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு வெற்றி வாய்ப்பு
இதில் இந்தியா வெற்றி பெற மிகவும் சிறப்பான பேட்டிங் தேவைப்படும். ஆனால் மைதானம் அதற்கு ஒத்துழைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில், சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவால் சேஸ் செய்யப்பட்ட அதிக ரன்களின் பட்டியலை இதில் பார்க்கலாம். 2008ஆம் ஆண்டு சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக 387 ரன்களை சேஸ் செய்ததுதான் சொந்த மண்ணில் நடந்த டெஸ்டில் இந்தியாவால் துரத்தப்பட்ட அதிகபட்ச இலக்காகும். அதன்பிறகு, இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் சேஸ் செய்தது இல்லை. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2011இல் டெல்லியில் 276 ரன்கள் இந்தியா சேஸ் செய்த இரண்டாவது அதிகபட்சமாக உள்ளது. 2012இல் பெங்களூரு டெஸ்டில் நியூசிலாந்துக்கு எதிராக 261 ரன்களை சேஸ் செய்தது மூன்றாவது இடத்தில் உள்ளது.
சாதனையை உடைப்பது யார்?
1964இல் பிரபோர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 254 ரன்களை சேஸ் செய்தது நான்காவது இடத்திலும், 2010இல் மொஹாலி டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 216 ரன்களை சேஸ் செய்தது ஐந்தாவது இடத்திலும் உள்ளது. இந்த போட்டியில் இந்தியா கடைசி இன்னிங்சில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றால், நியூசிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்து 12 வருடத்திற்கு முந்தைய சாதனையை முறியடிக்கும். அதே நேரம், நியூசிலாந்து கிரிக்கெட் அணி வெற்றி பெற்றால், 12 வருடங்கள் தொடரை இழக்காத இந்தியாவின் சாதனைக்கு முடிவுரை எழுதும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் மூன்று நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், இந்த டெஸ்ட் மேட்ச் ரசிகர்களிடையே ஆர்வத்தை அதிகரித்துள்ளது.