முடிவுக்கு வருகிறது பாரிஸ் பாராலிம்பிக்ஸ்; இந்திய அணியின் அணிவகுப்பிற்கு தலைமை தாங்கும் ஹர்விந்தர் சிங், ப்ரீத்தி பால்
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் நிறைவு விழாவில் தங்கப் பதக்கம் வென்ற வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங் மற்றும் ஓட்டப்பந்தய வீராங்கனை ப்ரீத்தி பால் ஆகியோர் தேசியக் கொடி ஏந்தி இந்திய அணியின் அணிவகுப்பிற்கு தலைமையேற்ற உள்ளனர். 33 வயதான ஹர்விந்தர், பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்ற முதல் இந்திய வில்வீரர் என்ற பெயரை வரலாற்றில் பொறித்துள்ளார். மேலும் 2021இல் டோக்கியோவில் அவர் வென்ற வெண்கலத்தையும் சேர்த்தார். தேசியக் கொடி ஏந்தும் வாய்ப்பு குறித்து பேசிய ஹர்விந்தர், "இந்தியாவுக்காக தங்கம் வெல்வது ஒரு கனவு நனவாகிவிட்டது. இப்போது நிறைவு விழாவில் கொடி ஏந்தியவனாக நம் தேசத்தை வழிநடத்துவது நான் கற்பனை செய்யக்கூடிய மிக உயர்ந்த கவுரவம்." என்று கூறினார்.
இரண்டு வெண்கலம் வென்ற ப்ரீத்தி பால்
23 வயதான ஓட்டப்பந்தய வீராங்கனை ப்ரீத்தி பால், பெண்களுக்கான டி35 100மீ மற்றும் 200மீ ஓட்டங்களில் முறையே 14.21 மற்றும் 30.01 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். தேசியக் கொடி ஏந்துவது குறித்து பேசிய அவர், "கொடி ஏந்தியவராக இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு பெரிய கவுரவம். இந்த தருணம் என்னைப் பற்றியது அல்ல; இது நம் தேசத்தை பெருமைப்படுத்த தங்கள் வரம்புகளைத் தாண்டிய ஒவ்வொரு பாரா-தடகள வீரர்களுக்கானது. எங்கள் நம்பமுடியாத அணியை வழிநடத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்." என்று கூறினார். இதற்கிடையே, இந்தியாவின் பாராலிம்பிக் குழு இதுவரை இல்லாத அளவில் ஆறு தங்கம் மற்றும் ஒன்பது வெள்ளி உட்பட 26 பதக்கங்களுடன் பாரிஸ் போட்டியை நிறைவு செய்துள்ளது.