INDvsAUS ஒருநாள் உலகக்கோப்பை : ஹர்திக் பாண்டியாவுக்கு காயம்; இந்திய அணிக்கு பின்னடைவா?
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை ஆட்டத்தில் இந்தியா பங்கேற்க உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் வலைப்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், பயிற்சியின்போது இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், ஆல்ரவுண்டருமான ஹர்திக் பாண்டியா காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அணியிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை என்றாலும், பயிற்சி அமர்வில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிரான பேட்டிங் பயிற்சியின்போது கை விரலில் காயமடைந்ததாகத் தெரிகிறது. எனினும், இது சிறிய காயமே என்பதால் போட்டியில் அவர் நிச்சயம் பங்கேற்பார் என்றும், அதே நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஷுப்மன் கில் நிலைமை என்ன?
ஹர்திக் பாண்டியா காயம் ஒருபுறம் பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஷுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில், இந்த ஆண்டு இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்ததோடு, 70க்கும் மேல் சராசரியை வைத்துள்ளார். மேலும், ஐசிசி பேட்டிங் தரவரிசையில் பாபர் அசாமுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர் இடம்பெறாதது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்படும் நிலையில், அவருக்கு பதிலாக இஷான் கிஷன் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.