முட்டாள்தனமான யோசனை; உலகக்கோப்பை நிர்வாகிகளை விளாசிய ஆஸி. வீரர் கிளென் மேக்ஸ்வெல்
புதன்கிழமை (அக்.25) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் மைதானத்தில் நிகழ்த்தப்பட்ட ஒலி மற்றும் ஒளி காட்சிகள் தலைவலியை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். புதுடெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் நெதர்லாந்து பேட்டிங் செய்தபோது, ரசிகர்களை குஷிப்படுத்த ஒலி மற்றும் ஒளி காட்சி நிகழ்த்தப்பட்டது. இரண்டு நிமிடம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது மேக்ஸ்வெல் இரு கைகளாலும் கண்களை மூடிக்கொண்டார். போட்டிக்கு பிறகு இதுகுறித்து பேசிய அவர், "அது எனக்கு அதிர்ச்சியூட்டும் தலைவலியைக் கொடுத்தது போல் நான் உணர்ந்தேன். மேலும் என் கண்களை சரிசெய்ய சிறிது நேரம் ஆகும். ரசிகர்களுக்கு இது நன்றாக இருந்தாலும், கிரிக்கெட் வீரர்களுக்கு இது எரிச்சலூட்டும். இது முட்டாள்தனமான யோசனை என்று நினைக்கிறேன்." என்றார்.
உடல்நிலை சரியில்லாமல் விளையாடிய கிளென் மேக்ஸ்வெல்
தனது அதிரடியான பேட்டிங்கிற்காக "தி பிக் ஷோ" என்று செல்லப்பெயர் பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் மேக்ஸ்வெல், போட்டிக்கு முன்னதாக, தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு சரியாக தூங்காததால் உடல்நிலை சரியில்லாமல் விளையாடியதாக அவர் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆமாம், சிறப்பாக இல்லை. நான் உடை மாற்றும் அறையில் அமர்ந்திருந்தேன். நான் உண்மையில் பேட்டிங் செய்ய விரும்பவில்லை. ஆனால் வெளியில் வந்தபோது குளிர்ச்சியாக உணர்ந்தேன்." என்று கூறினார். இதற்கிடையே, இந்த போட்டியில் 40 பந்துகளில் சதத்தை எட்டியதன் மூலம், கிளென் மேக்ஸ்வெல் ஒருநாள் உலகக்கோப்பையில் அதிவேக சதமடித்தவர் என்ற சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.