மீண்டும் இந்தியாவிற்கு வரும் ஃபார்முலா 1! FMSCI அமைப்பிற்கு தேசிய விளையாட்டு கூட்டமைப்பு அங்கீகாரம் வழங்கியது மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் ஃபார்முலா 1 கார் பந்தயங்களை மீண்டும் நடத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்திய மோட்டார் விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பிற்கு (FMSCI) தேசிய விளையாட்டு கூட்டமைப்பு (NSF) என்ற தற்காலிக அங்கீகாரத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் வழங்கியுள்ளது. இதன் மூலம் அரசுக்கும் மோட்டார் விளையாட்டு அமைப்புகளுக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பு உருவாகி, இந்தியாவில் ஃபார்முலா 1 பந்தயங்கள் மீண்டும் தொடங்குவதற்கான பாதையை எளிதாக்கும்.
2028
2028க்குள் ஃபார்முலா 1 பந்தயத்தை நடத்த இலக்கு
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, வரும் 2028 ஆம் ஆண்டிற்குள் ஃபார்முலா 1 பந்தயத்தை இந்தியாவில் வெற்றிகரமாக நடத்தத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதற்காகப் பிரத்யேக பணிக்குழு அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த பணிக்குழுவானது இந்தியாவில் மோட்டார் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதால் ஏற்படும் பொருளாதார நன்மைகள், சுற்றுலா வளர்ச்சி, முதலீடுகள் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்கும்.
சட்டம்
தேசிய விளையாட்டு ஆளுகை சட்டத்திற்கு ஏற்ப மாற்றங்கள்
சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு அருண்தம் கோஷ் தலைமையில் இயங்கி வரும் FMSCI அமைப்பு, தனது அரசியலமைப்பு மற்றும் விதிகளில் தேசிய விளையாட்டு ஆளுகை சட்டம் 2025க்கு ஏற்ப திருத்தங்களை செய்யுமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் நிதி நிலைமை, ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகள் மற்றும் ஆளுகைக் அமைப்புகளில் ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஃபார்முலா 1 ரசிகர்கள்
இந்தியாவில் அதிகரிக்கும் ஃபார்முலா 1 ரசிகர்கள்
முன்னதாக இந்தியாவில் 2011 முதல் 2013 வரை புத்தா சர்வதேசப் பாதையில் ஃபார்முலா 1 பந்தயங்கள் நடைபெற்றன.
ஆனால் வரி விதிப்பு மற்றும் நிதி தொடர்பான சிக்கல்கள் காரணமாக அது நிறுத்தப்பட்டது.
தற்பொழுது இந்தியாவில் ஃபார்முலா 1 பந்தயங்களுக்கான ரசிகர்கள் எண்ணிக்கை கடந்த சில மாதங்களிலேயே 79 மில்லியனில் இருந்து 98 மில்லியனாகப் பிரம்மாண்டமாக உயர்ந்துள்ளது.
ரசிகர்களின் இந்த மாபெரும் வரவேற்பே ஃபார்முலா 1 பந்தயத்தை மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டுவர முக்கியக் காரணமாகும்.
வரவேற்பு
ஃபார்முலா 1 நிர்வாகத்தின் வரவேற்பு
ஃபார்முலா 1 தலைமை செயல் அதிகாரி ஸ்டெபானோ டொமெனிகாலி, இந்திய ரசிகர்களின் அதிகப்படியான ஆர்வத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
சரியான முதலீடுகள், சரியான உள்கட்டமைப்பு மற்றும் திறமையான நிர்வாகத் திட்டங்கள் அமையும் பட்சத்தில் இந்தியாவில் ஃபார்முலா 1 பந்தயங்கள் மீண்டும் வெற்றிகரமாகத் தொடங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அரசின் இந்த புதிய அங்கீகாரம் மற்றும் வழிகாட்டுதல்கள் இந்திய மோட்டார் விளையாட்டுத் துறையில் ஒரு புதிய எழுச்சியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.