Page Loader
முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பரிமல் டே உடல்நலக்குறைவால் காலமானார்!
முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பரிமல் டே காலமானார்

முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பரிமல் டே உடல்நலக்குறைவால் காலமானார்!

எழுதியவர் Sekar Chinnappan
Feb 02, 2023
11:44 am

செய்தி முன்னோட்டம்

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் பரிமல் டே, தனது 81வது வயதில் கொல்கத்தாவில் உடல்நலக்குறைவால் புதன்கிழமையன்று (பிப்ரவரி 1) காலமானார். மே 4, 1941இல் பிறந்த டே, கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு 2019 இல் மேற்கு வங்க அரசால் பங்கா பூஷன் பட்டத்தை பெற்றார். அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎப்எப்) முன்னாள் இந்திய வீரரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. ஏஐஎப்எப் தலைவர் கல்யாண் சவுபே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "முன்னாள் இந்திய நட்சத்திரம் பரிமல் டேயின் மறைவு இந்திய கால்பந்தாட்டத்திற்கு ஒரு பெரிய இழப்பாகும். அவர் 1960களின் சிறந்த வீரர்களில் ஒருவர், இன்றுவரை ரசிகர்களின் இதயங்களிலும் மனதிலும் நிலைத்திருக்கிறார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்." என்று தெரிவித்துள்ளார்.

பரிமல் டே

கால்பந்தாட்டத்தில் பரிமல் டேவின் சிறப்பு தருணங்கள்

பரிமல் டே இந்தியாவுக்காக ஐந்து சர்வதேச போட்டிகளில் விளையாடினார். 1966 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த மெர்டேகா கோப்பையின் வெண்கலப் பதக்கப் போட்டியில் கோல் அடித்து கொரியாவை வீழ்த்தி, இந்தியாவுக்கு பட்டம் பெற்றுத் தந்தார். உள்நாட்டு அளவில், அவர் 1962 மற்றும் 1969இல் இரண்டு முறை சந்தோஷ் டிராபியை வென்ற பெருமையைப் பெற்றார். 1966, 1970 மற்றும் 1973 ஆம் ஆண்டுகளில் கல்கத்தா கால்பந்து லீக் மற்றும் ஐஎஃப்ஏ ஷீல்டை மூன்று முறை வென்றதன் பெருமையை டே பெற்றுள்ளார். மேலும் இரண்டு ஐஎஃப்ஏ ஷீல்ட் இறுதிப் போட்டிகளில் பிஎன்ஆர் (1966) மற்றும் ஈரானிய சைட் பிஏஎஸ் (1970) கிளப்பிற்கு எதிராக கோல் அடித்து இந்திய கால்பந்து சரித்திரத்தில் தனது பெயரைப் பதித்துள்ளார்.