இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் அலஸ்டைர் குக் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டைர் குக் அனைத்து வகையான தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டில், இடது கை தொடக்க ஆட்டக்காரர் ஏற்கனவே சர்வதேச ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர், தனது நீண்ட கால கவுண்டி அணியான எசெக்ஸில் தொடர்ந்து விளையாடி வந்த அலஸ்டைர் குக், இந்த ஆண்டுடன் அங்கு முடிவடையும் தனது ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுத்துவிட்டார். இதனால், அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என ஏற்கனவே ஊகங்கள் இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) அதிகாரப்பூர்வமாக ஓய்வை அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டின் ஜாம்பவான் அலஸ்டைர் குக்
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிகக்குறைவான போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும், அலஸ்டைர் குக் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்கிறார். குக் 161 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார், அதில் 59 கேப்டனாக இருந்துள்ளார். மேலும் 12,472 ரன்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை தக்க வைத்துள்ளார். மேலும், சர்வதேச அளவில், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருக்குப் பிறகு, அதிக ரன் குவித்த வீரராகவும் உள்ளார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அவரை "விளையாட்டின் டைட்டன்" என்று வர்ணித்தது.