
முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு! அரசு உத்தரவு!
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் பாதுகாப்பை இசட் பிரிவுக்கு மேம்படுத்த மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.
கங்குலிக்கு வழங்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்புக்கான காலக்கெடு செவ்வாய்க்கிழமை (மே 16) காலாவதியானதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
"விவிஐபியின் பாதுகாப்பு காலாவதியானதால், நெறிமுறையின்படி மறுஆய்வு செய்யப்பட்டது. மேலும் கங்குலியின் பாதுகாப்பு வளையத்தை இசட் வகைக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டது." என்று மேற்குவங்க அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
புதிய பாதுகாப்பு ஏற்பாட்டின்படி, கங்குலிக்கு 8 முதல் 10 போலீசார் வரை பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
persons getting high security in west bengal
மேற்கு வங்கத்தில் உயரடுக்கு பாதுகாப்பு பெறும் நபர்கள்
இதற்கு முன்னதாக ஒய் பிரிவு பாதுகாப்பின் கீழ், கங்குலியின் பாதுகாப்புக்கு சிறப்புப் பிரிவைச் சேர்ந்த மூன்று போலீஸ்காரர்களும், அவரது பெஹாலா இல்லத்தைப் பாதுகாப்பதற்கு மூன்று போலீஸ்காரர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கங்குலி தற்போது ஐபிஎல்லில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் இருப்பதால், அங்கிருந்து மே 21 அன்று கொல்கத்தா வந்த உடன் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும்.
மேற்கு வங்கத்தில் தற்போது முதல்வர் மம்தா பானர்ஜி, கவர்னர் சிவி ஆனந்த போஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி ஆகியோருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பும், அமைச்சர்களான ஃபிர்ஹாத் ஹக்கிம், மோலோய் கட்டக் ஆகியோருக்கு இசட் பிரிவு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
பாஜகவின் மேற்கு வங்கத் தலைவர் சுகந்தா மஜும்தாருக்கும் சிஐஎஸ்எப் பாதுகாப்புடன் இசட் ப்ளஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.