Loading...
சிறையில் இம்ரான் கான், கவலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் புயல்கள்: பென்னி வாங்கிற்கு ஆஸ்திரேலிய கேப்டன்கள் கடிதம்
இம்ரான் கான், தற்போது ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

சிறையில் இம்ரான் கான், கவலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் புயல்கள்: பென்னி வாங்கிற்கு ஆஸ்திரேலிய கேப்டன்கள் கடிதம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 15, 2026
05:38 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், தற்போது ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மற்றும் சிறையில் நடத்தப்படும் விதம் குறித்து உலகளாவிய கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், அவருக்கு முறையான சிகிச்சையும் மரியாதையும் வழங்கக் கோரி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் 7 முன்னாள் கேப்டன்கள் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வாங்கிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கோரிக்கை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் புயல்கள் ஒன்றிணைவு

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரருமான கிரெக் சேப்பல் தலைமையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய பங்கு வகித்த ஆலன் பார்டர், இயன் சேப்பல், பெலிண்டா கிளார்க், கிம் ஹியூஸ், மார்க் கெய்லர் மற்றும் ஸ்டீவ் வாக் ஆகிய 6 முன்னாள் கேப்டன்களும் இதில் இணைந்துள்ளனர்.

இம்ரான் கான் மீதான சட்ட மற்றும் அரசியல் வழக்குகளில் தங்களுக்கு எவ்வித நிலைப்பாடும் இல்லை என்றும், இது முழுக்க முழுக்க மனிதநேயம் மற்றும் அடிப்படை உரிமைகள் சார்ந்த கோரிக்கை என்றும் அவர்கள் அக்கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

உரிய சிகிச்சை

வெளியுறவு அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டுள்ள 3 முக்கியக் கோரிக்கைகள்

இம்ரான் கானின் வலது கண் பார்வை குறைபாடு அடைந்துள்ளதாகக் கூறப்படும் சூழலில், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சர்வதேசக் கிரிக்கெட் சமூகத்தின் சார்பில் பின்வரும் முக்கியக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இம்ரான் கானின் சொந்த மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவைக் கொண்டு அவரது உடல்நிலையை முழுமையாக ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்; நீதிமன்றம் அனுமதித்துள்ள வாராந்திரக் குடும்பச் சந்திப்புகளை எவ்வித நிர்வாகத் தாமதமும் தடையுமின்றி செயல்படுத்த வேண்டும்; மருத்துவப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும் உரிய சிகிச்சைகளை எவ்வித தாமதமுமின்றி உடனடியாக வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

சர்வதேச ஆதரவு

தொடரும் சர்வதேச ஆதரவுக் குரல்கள்

ஏற்கனவே இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் 14 முன்னாள் கேப்டன்களும், அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பிற்கு 22 சர்வதேச முன்னாள் கேப்டன்களும் இம்ரான் கானுக்காகக் கடிதம் எழுதியிருந்தனர்.

தற்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ், பாகிஸ்தானின் ஜாவேத் மியாண்டாத், வாசிம் அக்ரம் மற்றும் மொயின் கான் ஆகியோரும் இக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இம்ரான் கானின் மகன்கள் மற்றும் சகோதரிகள் அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து கவலை தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவு அமைச்சர் பென்னி வாங்கை நேரில் சந்தித்துப் பேச கிரெக் சேப்பல் அனுமதி கோரியுள்ளார்.

ADVERTISEMENT