ஒன்றல்ல, இரண்டல்ல.. ஒரே டி20 போட்டியில் மூன்று சூப்பர் ஓவர்கள்; வரலாற்றில் முதல் முறை
ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று சூப்பர் ஓவர்கள் ஒரே போட்டியில் விளையாடப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அப்படியொரு சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக, மஹாராஜா டி20 டிராபியின் நடப்பு சீசனில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் மற்றும் ஹூப்ளி டைகர்ஸ் இடையேயான போட்டியில் இந்த வரலாறு படைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் பிளாஸ்டர்ஸ் கேப்டன் மயங்க் அகர்வால் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மணீஷ் பாண்டே தலைமையிலான ஹூப்ளி டைகர்ஸ் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் எடுத்தது. பெங்களூர் பிளாஸ்டர்ஸ் அணியின் லாவிஷ் கௌஷல் அதிகபட்சமாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆட்டம் டிரா ஆனதால் மூன்று சூப்பர் ஓவர்கள்
165 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் பிளாஸ்டர்ஸ் அணியும் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் போட்டி டையில் முடிந்தது. இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்ற நிலையில், முதல் சூப்பர் ஓவரில் இரு அணிகளும் தலா 10 ரன்கள் எடுத்ததால் போட்டி மீண்டும் டை ஆனது. இதையடுத்து இரண்டாவது முறையாக சூப்பர் ஓவர் வீச, அதிலும் இரு அணிகளும் தலா 8 ரன்கள் எடுத்து போட்டி டை ஆக, இறுதியில் மூன்றாவது சூப்பர் ஓவரில் பெங்களூர் பிளாஸ்டர்ஸ் 12 ரன்கள் எடுத்த நிலையில், ஹூப்ளி டைகர்ஸ் 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.