LOADING...
இந்திய ஹாக்கியில் புதிய சரித்திரம்! ஜெர்மனியை கதறவிட்ட இந்திய அணி
ஜெர்மனியை கதறவிட்ட இந்திய ஹாக்கி அணி

இந்திய ஹாக்கியில் புதிய சரித்திரம்! ஜெர்மனியை கதறவிட்ட இந்திய அணி

எழுதியவர் Venkatalakshmi V
Jun 18, 2026
07:38 am

செய்தி முன்னோட்டம்

நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் உள்ள ஹஸேலார்வெக் மைதானத்தில் நடைபெற்ற 2025-26 ஆண்களுக்கான FIH புரோ ஹாக்கி லீக் (Men's FIH Pro Hockey League) தொடரின் 10-வது லீக் போட்டியில், இந்திய ஹாக்கி அணி உலக சாம்பியனான ஜெர்மனியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இத்தொடரில் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டி, இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங்கின் வாழ்நாளில் ஒரு மறக்க முடியாத மைல்கல்லாக அமைந்துள்ளது.

சாதனை

திலிப் திர்கியின் சாதனையை முறியடித்த மன்பிரீத் சிங்

இப்போட்டியில் களம் கண்டதன் மூலம் 33 வயதான மன்பிரீத் சிங், சர்வதேச ஹாக்கி வரலாற்றில் இந்தியாவின் சார்பில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார். இது அவருக்கு 413-வது சர்வதேசப் போட்டியாகும். இதன் மூலம் இந்திய ஹாக்கி லெஜண்ட் திலிப் திர்கியின் (412 போட்டிகள்) நீண்ட கால சாதனையை அவர் முறியடித்துள்ளார். 2011-ல் அறிமுகமாகி, டோக்கியோ ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று தந்த கேப்டன் மன்பிரீத் சிங்கின் தற்போதைய சாதனையை பாராட்டி, ஹாக்கி இந்தியா (HI) அவருக்கு ₹10 லட்சம் ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது.

இந்திய வீரர்கள்

ஜெர்மனியை திணறடித்த இந்திய வீரர்கள்

போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இந்திய அணி, ஆட்டத்தின் மூன்றாவது காலாண்டிற்குள் 3-0 என வலுவான முன்னிலை பெற்றது. இந்தியாவின் மந்தீப் சிங் (7-வது நிமிடம்), ஷிலானந்த் லக்ரா (13-வது நிமிடம்) மற்றும் நீலகண்ட சர்மா (35-வது நிமிடம்) ஆகியோர் அபாரமாக கோல் அடித்தனர். ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் ஜெர்மனியின் ரஃபேல் ஹார்ட்கோப் ஒரு ஆறுதல் கோல் அடித்தார். இறுதியாக இந்தியா 3-1 என்ற கணக்கில் நடப்பு உலக சாம்பியனை வீழ்த்தியது. இந்த வெற்றியின் பின்னரும் புள்ளிப்பட்டியலில் இந்தியா 9-வது இடத்திலேயே நீடிக்கிறது.

Advertisement

அட்டவணை

அடுத்தடுத்த போட்டிகளின் அட்டவணை

இத்தொடரில் விளையாடிய 10 போட்டிகளில் இந்தியா 6-ல் நேரடியாகவும், ஒன்றில் பெனால்டி ஷூட்-அவுட்டிலும் தோற்றுள்ளது. தற்போதைய வெற்றி மற்றும் ஒரு ஷூட்-அவுட் வெற்றியுடன் இந்தியா மீண்டெழுந்து வரும் சூழலில், அடுத்தபடியாக ஜூன் 18 அன்று மீண்டும் ஜெர்மனியுடனும், ஜூன் 21 அன்று நெதர்லாந்துடனும் மோதவுள்ளது. அதனைத் தொடர்ந்து லண்டனுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, தங்களின் முரண் எதிரியான பாகிஸ்தானை ஜூன் 23 மற்றும் 26 ஆகிய தேதிகளிலும், இங்கிலாந்தை ஜூன் 25 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும் எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement