LOADING...
'எங்களை அசிங்கப்படுத்துகிறார்கள்': FIFA அமைப்பிற்கு எதிராக ஈரான் கேப்டன், பயிற்சியாளர் குமுறல்
FIFA அமைப்பிற்கு எதிராக ஈரான் கேப்டன், பயிற்சியாளர் குமுறல்

'எங்களை அசிங்கப்படுத்துகிறார்கள்': FIFA அமைப்பிற்கு எதிராக ஈரான் கேப்டன், பயிற்சியாளர் குமுறல்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 16, 2026
01:27 pm

செய்தி முன்னோட்டம்

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து 2026 தொடரின் தங்களின் முதலாவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் 2-2 என டிரா செய்த சில மணி நேரங்களிலேயே, அமெரிக்க அதிகாரிகளால் ஈரான் அணியினர் உடனடியாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவின் இந்த உத்தரவால், தங்களின் அணி வீரர்கள் உடலளவிலும் மனதளவிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இந்த உலகக்கோப்பைத் தொடரிலேயே "மிகவும் ஒடுக்கப்பட்ட ஒற்றை அணி எங்களுடையது தான்" என்று ஈரானின் தலைமைப் பயிற்சியாளர் அமீர் காலேனோய் சர்வதேச ஊடகங்கள் மத்தியில் தனது கடுமையான குமுறலையும், பிஃபா அமைப்பின் மீதான அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

வெளியேற்றம்

லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து வெளியேற்றம்

போட்டிக்கு பிறகு, ஈரான் வீரர்கள் தங்களின் சோர்வை நீக்கிக் கொள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், போட்டி முடிந்த உடனேயே அமெரிக்க அதிகாரிகள் ஈரான் அணியினரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறி, மெக்சிகோவில் உள்ள தங்களின் பயிற்சி முகாமிற்குத் திரும்புமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து பேசிய பயிற்சியாளர்,"போட்டி முடிந்த சில நிமிடங்களிலேயே 'நீங்கள் உடனடியாக இங்கிருந்து கிளம்ப வேண்டும்' என்று எங்களிடம் கூறினார்கள். ஒரு போட்டி முடிந்த பிறகு வீரர்களுக்கு ஓய்வும், உடற்தேற்றமும் எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் எங்களை அவர்கள் மதிக்கவில்லை. இந்த உலகக்கோப்பையில் எங்கள் கால்பந்து கூட்டமைப்புடன் இல்லை, எங்கள் நாட்டின் ஊடகங்கள் இல்லை, மேலாளர்கள் இல்லை. நாங்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு அநீதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம்" என்றார்.

கட்டுப்பாடுகள்

விசா மறுப்பு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுச் சித்திரவதைகள்

அமெரிக்காவின் கடுமையான குடியேற்ற நடைமுறைகள் காரணமாக ஈரான் அணி ஏற்கனவே அரிசோனாவில் அமைக்கவிருந்த தங்களின் பயிற்சி முகாமை கைவிட்டு, மெக்சிகோவில் முகாமிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. அதற்கேற்றாற்போல், ஈரான் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் மெஹ்தி தாஜ், அணியின் ஊடக அதிகாரிகள் மற்றும் பகுப்பாய்வாளர்கள் உட்படப் பல முக்கிய தொழில்நுட்பக் குழுவினருக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்துள்ளது. இதன் காரணமாக, முறையான தொழில்நுட்பக் குழுவின் ஆதரவின்றி ஈரான் அணி போட்டியில் களம் கண்டது. மேலும், மெக்சிகோ எல்லையிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வர சில மணி நேரமே ஆகும் நிலையில், அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளின் இழுத்தடிப்புகளால் ஈரான் வீரர்கள் சுமார் 5 மணி நேரம் எல்லையிலேயே காத்திருக்க வைக்கப்பட்ட கொடுமையும் அரங்கேறியுள்ளது.

Advertisement

கோரிக்கை

"பிஃபா எங்களுக்கு உதவ வேண்டும்": கேப்டன் மெஹ்தி தாரேமி

போட்டி முடிந்த பிறகு ஈரானின் உடை மாற்றும் அறைக்கு நேரில் வந்த பிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவிடம் ஈரான் அணி கேப்டன் மெஹ்தி தாரேமி தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பட்டியலிட்டுள்ளார். இது குறித்துப் பேசிய தாரேமி,"உலகக்கோப்பை போன்ற ஒரு மாபெரும் தொடரில் விளையாடும் அணிகளுக்குப் போட்டிக்குத் தயாராவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் சிறந்த சூழலை உருவாக்கித் தர வேண்டியது கடமை. ஆனால் எங்களுக்கு எல்லாமே பேரழிவாக அமைந்துள்ளது. பிஃபா தலைவர் எங்களுக்கு உதவ விரும்புகிறார், ஆனால் உலகக்கோப்பை அரசியல் இதையும் தாண்டி வேறு ஏதோ ஒரு திசையில் நகர்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். பிஃபா எங்களுக்கு இன்னும் கூடுதலாக உதவ வேண்டும்" என்று ஆதங்கப்பட்டார்.

Advertisement