Loading...
கால்பந்து விளையாட்டை விற்க முடியாது! உலகக்கோப்பை பில்லியன் டாலர் ஒப்பந்தத்தைக் கைவிட்ட ஃபிஃபா தலைவர்
உலகக்கோப்பை விற்பனை திட்டத்தை கைவிட்டார் ஃபிஃபா தலைவர் இன்ஃபான்டினோ

கால்பந்து விளையாட்டை விற்க முடியாது! உலகக்கோப்பை பில்லியன் டாலர் ஒப்பந்தத்தைக் கைவிட்ட ஃபிஃபா தலைவர்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 01, 2026
05:28 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபாவின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ, ஃபிஃபா உலகக்கோப்பை போட்டிகளின் லாபப் பங்குகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் தனது 20 பில்லியன் டாலர் பிரம்மாண்ட திட்டத்தைக் கடுமையாக எழுந்த எதிர்ப்புகள் காரணமாக முழுமையாகக் கைவிட்டுள்ளதாக முறைப்படி அறிவித்துள்ளார். உலகளவில் உள்ள பல்வேறு பிராந்திய கால்பந்து கூட்டமைப்புகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பு நாடுகள் இத்திட்டத்திற்குத் தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்ததுடன், உலகக்கோப்பை போட்டிகளைப் புறக்கணிக்கப் போவதாகவும் எச்சரித்ததைத் தொடர்ந்து இன்ஃபான்டினோ இந்த பின்வாங்கலை மேற்கொண்டுள்ளார்.

புறக்கணிப்பு எச்சரிக்கை

UEFA எழுப்பிய காரசாரமான புறக்கணிப்பு எச்சரிக்கை

ஃபிஃபா தலைவரின் இந்த முயற்சிக்கு ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான UEFA உடனடியாக தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தது.

ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உட்பட 55 உறுப்பு நாடுகளைக் கொண்ட யுவேஃபா, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஃபிஃபா நடத்தும் உலகக்கோப்பை உட்பட அனைத்துப் போட்டிகளையும் முழுமையாகப் புறக்கணிப்போம் என அதிரடியாக அறிவித்தது.

"சில விஷயங்கள் விற்பனைக்கு உரியவை அல்ல; உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டுக்கு மட்டுமே சொந்தமானது, அது ஒருபோதும் விற்பனைக்கு வராது" என UEFA தனது உத்தியோகபூர்வ அறிக்கையில் மிகக் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தது.

கண்டனம்

மூத்த அதிகாரிகளின் ராஜினாமா மற்றும் கண்டனம்

இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஃபிஃபா தலைவரின் மூத்த ஆலோசகரான கார்லோஸ் கார்டிரோ தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார்.

"உலகக்கோப்பையின் பங்குகளை ஃபிஃபா விற்பனை செய்ய நினைப்பதை என்னால் ஏற்றுக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது" என அவர் கருத்து தெரிவித்தார்.

அதேபோல ஃபிஃபாவின் தலைமை செயல்பாட்டு அதிகாரியான கெவின் லமுரும் இத்திட்டத்திற்கு எதிராகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்ததுடன், இது தனிநபர் ஒருவரின் தன்னிச்சையான முடிவு என வெளிப்படையாகக் விமர்சித்தார்.

ADVERTISEMENT

ஆதரவு

ஆசிய மற்றும் வட அமெரிக்கக் கூட்டமைப்புகளின் ஆதரவு

UEFAவைத் தொடர்ந்து ஆசியக் கால்பந்து கூட்டமைப்பு மற்றும் வட அமெரிக்கக் கால்பந்து கூட்டமைப்பும் இந்த எதிர்ப்புக் குரலில் தங்களை இணைத்துக் கொண்டன.

அனைத்துத் திசைகளிலிருந்தும் அழுத்தம் அதிகரித்ததால், வெள்ளிக்கிழமை இரவு அறிக்கை வெளியிட்ட இன்ஃபான்டினோ, "அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் உன்னிப்பாகக் கேட்டறிந்த பிறகு, இந்த முன்மொழிவு கால்பந்து சமூகத்திற்குள் தேவையற்ற பிரிவினையை உருவாக்குவது தெளிவாக்கப்பட்டுள்ளது.

எனவே இத்திட்டம் இனிமேலும் தொடராது." எனக்கூறி தனது திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

ADVERTISEMENT