FIFA 2026: 2-0 என முன்னிலை பெற்றும் எகிப்துக்கு நேர்ந்த சோகம்; அர்ஜென்டினாவுக்கு சாதகமாக செயல்பட்டதா VAR?
செய்தி முன்னோட்டம்
ஃபிஃபா உலகக்கோப்பையின் 16-வது சுற்று நாக்-அவுட் போட்டியில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவுக்கு எதிராக 2-0 என தாராளமாக முன்னிலை வகித்த எகிப்து அணி, ஆட்டத்தின் கடைசி 11 நிமிடங்களில் 3 கோல்களை கோட்டைவிட்டு 3-2 என்ற கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, வீடியோ உதவி நடுவர்(VAR) தொழில்நுட்பம் மற்றும் கள நடுவர் பிரான்சுவா லெடெக்சியர் ஆகியோர் தங்களுக்கு பாரபட்சமாகச் செயல்பட்டதாக எகிப்து அணியின் பயிற்சியாளர் ஹோசாம் ஹாசன் மற்றும் வீரர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். கிறிஸ்டியன் ரொமேரோ, லியோனல் மெஸ்ஸி மற்றும் என்ஸோ பெர்னாண்டஸ் ஆகியோரின் அடுத்தடுத்த அதிரடி கோல்களால் அர்ஜென்டினா காலிறுதிக்கு முன்னேறியது. ஆனால், எகிப்து பாசறையிலோ நடுவர்களின் முடிவுகள் திட்டமிட்டு தங்களை வீழ்த்தியதாக கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
"It's clear that this tournament has been fixed."
— BBC Sport (@BBCSport) July 7, 2026
Egypt's Mostafa Zico was not happy with some of the decisions in their game against Argentina. pic.twitter.com/VbDdFbkRBC
சர்ச்சை
ஆட்டத்தின் போக்கை மாற்றிய VAR சர்ச்சை
போட்டியின் முதல் பாதியில் யாசர் இப்ராஹிம் அடித்த கோலால் எகிப்து முன்னிலை பெற்றது. அதன்பின் லியோனல் மெஸ்ஸி எடுத்த பெனால்டி வாய்ப்பை எகிப்து கோல்கீப்பர் மோஸ்டபா ஷோபீர் மிகச்சிறப்பாகத் தடுத்து நிறுத்தினார். ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் முகமது சாலா கொடுத்த கச்சிதமான பாஸை எம்பிடியலாக்கி மோஸ்டபா ஜிகோ எகிப்தின் இரண்டாவது கோலை அடித்தார். ஆனால், இந்த கோல் அடிக்கப்படுவதற்கு முன்னதாக எகிப்தின் மர்வான் அத்தியா, அர்ஜென்டினாவின் லிசாண்ட்ரோ மார்டினெஸை ஃபவுல் செய்ததாகக் கூறி, நடுவர் மைதானத்தின் ஓரமாக இருந்த மானிட்டரை சோதித்து அந்த கோலை ரத்து செய்தார். மைதானத்தின் மறுமுனையில் நடந்த ஒரு ஃபவுலுக்காக கோலை ரத்து செய்தது பெரும் விவாதத்தை கிளப்பியது.
மேட்ச் ஃபிக்சிங்
"இது திட்டமிடப்பட்ட மேட்ச் ஃபிக்சிங்!": எகிப்து வீரர் சாடல்
கடைசி நிமிடங்களில் அர்ஜென்டினா ஆக்ரோஷமாக விளையாடி 3 கோல்களை அடித்தது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில், அர்ஜென்டினாவின் பாக்ஸிற்குள் எகிப்து வீரரை அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் பிடித்து இழுத்ததற்கு எகிப்து பெனால்டி கேட்டது. ஆனால் நடுவர் அதனை VAR சோதனை செய்ய மறுத்துவிட்டார். போட்டி முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய எகிப்து பயிற்சியாளர் ஹோசாம் ஹாசன்,"இந்த முடிவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. உலக சாம்பியனை விட நாங்கள் எல்லாவற்றிலும் சிறப்பாக விளையாடினோம். ஆனால், களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடந்த சில காரணிகள் ஆட்டத்தின் முடிவை மாற்றிவிட்டன. அட்லாண்டாவில் மதிய வேளையில் நாக்-அவுட் போட்டியை நடத்தியது முட்டாள்தனமானது. நடுவர்களின் நம்பகத்தன்மை தற்பொழுது கேள்விக்குறியாகியுள்ளது" என்றார்.
மோஸ்டபா ஜிகோ
மோஸ்டபா ஜிகோ சாடல்
இரண்டு கோல்களை அடித்த எகிப்து ஸ்ட்ரைக்கர் மோஸ்டபா ஜிகோ இன்னும் ஒருபடி மேலே சென்று காரசாரமாகப் பேசினார். "நடுவர் ஆரம்பத்திலிருந்தே எங்களுக்கு எதிராகவே செயல்பட்டார். நாங்கள் வெற்றி பெறுவதை அவர் விரும்பவில்லை. இது ஒரு பிக்சிங் செய்யப்பட்ட ஆட்டம். இப்போதே அர்ஜென்டினாவுக்கு உலகக்கோப்பையை வென்றுவிட்டதாக வாழ்த்துகளைக் கூறிவிடுங்கள். அவர்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை போல" என்று கிண்டலாகவும் ஆக்ரோஷமாகவும் சாடினார். எகிப்து அணியின் இந்த கடுமையான குற்றச்சாட்டுகள் சர்வதேச கால்பந்து அரங்கில் விவாதப் புயலைக் கிளப்பியுள்ள போதிலும், மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி மீண்டும் ஒருமுறை தங்களின் சாம்பியன் ஆட்டத்தால் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.