"இந்திய அணியின் கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டது இப்படித்தான்" : முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் பூபிந்தர் சிங்
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த கேப்டன் என போற்றப்படும் எம்எஸ் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகத் தொடங்கியபோது, அவரது வாரிசாக விராட் கோலி விரைவில் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வகையில் உயர்த்தப்பட்டார். விராட் கோலி பதவி விலக முடிவு செய்தபோது, அவருக்குப் பதிலாக இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்த ரோஹித் சர்மா உடனடியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது ரோஹித் கேப்டன் பதவியில் இருந்து படிப்படியாக நீக்கி புதியவரை தலைமை பொறுப்புக்கு கொண்டு வர வேண்டிய நிலையில் உள்ளது. ஹர்திக் பாண்டியா ஏற்கனவே கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையின் முடிவில் இருந்து டி20ஐ அணியை வழிநடத்தி வருகிறார்.
சிறந்த கேப்டனை அடையாளம் காணும் போது கவனத்தில் கொள்ளும் விஷயங்கள்
முன்னாள் இந்திய தேர்வாளர் பூபிந்தர் சிங் சீனியர் கூறுகையில், கேப்டன் பதவிக்கு கிரிக்கெட்டின் புத்திசாலித்தனம் மற்றும் மனித மேலாண்மை திறன் உட்பட பல அம்சங்களைப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார். தோனி இந்திய கேப்டனாக நியமிக்கப்பட்டபோது, திலீப் வெங்சர்க்கார் தேர்வாளர்களின் தலைவராக இருந்தார். மேலும், மேலே குறிப்பிட்ட அம்சங்களின் அடிப்படையில் தான் எம்எஸ் தோனியும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். "தோனியின் ஆட்டம், உடல் மொழி, மற்றவர்களிடம் எப்படிப் பேசினார் என்பதை நாங்கள் பார்த்தோம். எங்களுக்கு நேர்மறையான கருத்து கிடைத்ததால் அவரை தேர்வு செய்தோம்." என்று அவர் கூறினார்.