
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5,000 ரன்கள் எடுத்த முதல் வீரர்; ஜோ ரூட் வரலாற்றுச் சாதனை
செய்தி முன்னோட்டம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 5,000 ரன்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் பெற்றுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக ஜோ ரூட்டின் நிலைத்தன்மை அவரது இந்த பிரமாண்ட சாதனைக்கு வித்திட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டிற்கு முன்னர் இந்த மைல்கல்லை எட்டுவதற்கு அவருக்கு 27 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
இந்த டெஸ்டில் இரண்டாவது நாளின் மூன்றாவது அமர்வில் அவர் சாதனையை எட்டினார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஜோ ரூட் 59 டெஸ்டில் விளையாடி 5,000 ரன்களைக் குவித்துள்ளதோடு, அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் மற்ற எந்தவொரு வீரரும் எட்ட முடியாத உயரத்தில் உள்ளார்.
அதிக ரன்கள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியல்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஜோ ரூட்டுக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிக ரன் குவித்த வீரராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மார்னஸ் லாபுசாக்னே உள்ளார். இவர் 45 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 3,904 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 45 டெஸ்டில் 3,486 ரன்களுடன் உள்ள நிலையில், நான்காவது இடத்தில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 48 டெஸ்டில் 3,101 ரன்களுடனும், ஐந்தாவது இடத்தில் பாகிஸ்தானின் பாபர் அசாம் 32 டெஸ்டில் 2755 ரன்களுடனும் உள்ளனர்.
இந்திய வீரர்களைப் பொறுத்தவரை ரோஹித் ஷர்மா 34 போட்டிகளில் 2,594 ரன்களுடன் இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார். டாப் 10 பட்டியலில் உள்ள ஒரே இந்தியர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.