ENG vs PAK: 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான்
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 44வது போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்தன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அரையிறுதிக்குச் செல்வதற்கு பாகிஸ்தான் அணிக்கு முக்கியமான போட்டியாக கருதப்பட்ட இன்றைய போட்டியில் இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்ததிலேயே பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட பறிபோயிருந்தது. முதலில் பேட்டிக் செய்த இங்கிலாந்து அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் அனைவரும் இன்று சற்று சிறப்பாகவே பேட்டிங் செய்திருந்தனர். முக்கியமாக அந்த அணியின் ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் சிறப்பான மற்றும் நிதானமான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்களைக் குவித்தது இங்கிலாந்து.
பறிபோன பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு:
இந்த 337 ரன்களை 6.2 ஓவர்களில், அதாவது 38 பந்துகளில் சேஸ் செய்தால் மட்டுமே பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலையில் அதிகாரப்பூர்வமாக நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான். 338 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்கள் தொடங்கிய வேகத்திலேயே ஆட்டமிழக்க, தடுமாறத் தொடங்கியது பாகிஸ்தான். அதன் பின் வந்த பேட்டர்களின் சற்று நிதானமான அணுகுமுறையால் கொஞ்சம் ரன்களைக் குவித்து பாகிஸ்தான். எனினும், இறுதியில் 43.3 ஓவர்களிலேயே 244 ரன்களை மட்டுமே குவித்திருக்க அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்திடம் 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது பாகிஸ்தான்.