எமெர்ஜிங் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்: 7 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வரும் எமெர்ஜிங் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சனிக்கிழமை (அக்டோபர் 19) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் ஷர்மா 35 ரன்களும், ப்ரப்சிம்ரன் சிங் 36 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை அமைத்தனர். பின்னர் கேப்டன் திலக் வர்மா 44 ரன்களும், நேஹல் வதேரா 25 ரன்களும் எடுத்ததன் மூலம், இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் சேர்த்தது.
பாகிஸ்தான் போராட்டம்
184 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது ஹாரிஸ் 6 ரன்களில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க வீரர் யாசிர் கான் 33 ரன்கள் சேர்த்தார். அதன் பின்னர் காசிம் அக்ரம் 27 ரன்களும், அரபாத் மின்ஹாஸ் 41 ரன்களும் எடுத்து அணியை வெற்றியை நோக்கி வழிநடத்தினர். பிறகு அப்துல் சமத் (25 ரன்கள்) மற்றும் அப்பாஸ் அப்ரிடி (18 ரன்கள்) அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தாலும், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது. இதன் மூலம் இந்த டி20 கிரிக்கெட் தொடரில் தனது முதல் போட்டியில் இளம் இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.