உலகின் நம்பர் 1 வீராங்கனையை வீழ்த்தி முதல்முறையாக ஆஸ்திரேலிய ஓபன் மகுடம் சூடினார் எலினா ரைபாகினா
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலிய ஓபன் 2026 டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், கஜகஸ்தானின் எலினா ரைபாகினா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இன்று (ஜனவரி 31) நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், உலகின் நம்பர் 1 வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான அரினா சபலென்காவை 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தனது முதல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தைக் கைப்பற்றினார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் இதே சபலென்காவிடம் ரைபாகினா தோல்வியைத் தழுவினார். அந்தத் தோல்விக்கு இப்போது அதே மைதானத்தில் பழிவாங்கியுள்ளார். முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றி அதிரடி காட்டிய ரைபாகினாவிற்கு, இரண்டாவது செட்டில் சபலென்கா பதிலடி கொடுத்தார்.
கஜகஸ்தான்
கஜகஸ்தானின் முதல் சாதனை
இருப்பினும், வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் ரைபாகினா மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-4 எனக் கைப்பற்றி கோப்பையை உறுதி செய்தார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற முதல் கஜகஸ்தான் வீராங்கனை என்ற பெருமையை எலினா ரைபாகினா பெற்றுள்ளார். முன்னதாக 2022 இல் விம்பிள்டன் பட்டத்தை வென்று தனது நாட்டிற்கு முதல் கிராண்ட் ஸ்லாம் கோப்பையைப் பெற்றுத் தந்தவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டாப் 10 வரிசையில் உள்ள வீராங்கனைகளுக்கு எதிராகத் தொடர்ந்து 10 வெற்றிகளைப் பெற்று ரைபாகினா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளார்.
சாதனை
மரியா ஷரபோவாவின் சாதனை சமன்
இந்தத் தொடரில் ரைபாகினா ஒரு அரிய சாதனையைப் படைத்துள்ளார். 2008 ஆம் ஆண்டு மரியா ஷரபோவா படைத்த சாதனைக்குப் பிறகு, ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் உலகின் டாப் 6 வரிசையில் உள்ள மூன்று வீராங்கனைகளை (இகா ஸ்வியாடெக், ஜெசிகா பெகுலா மற்றும் சபலென்கா) வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீராங்கனை ரைபாகினா ஆவார்.