இந்திய அணியில் தொடர் புறக்கணிப்பு; மன அழுத்தத்தில் கிரிக்கெட் வீரர் ப்ரித்வி ஷா
தனது தலைமுறையின் மிகவும் திறமையான பேட்டர்களில் ஒருவராகக் கருதப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ப்ரித்வி ஷா, கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறார். யு19 உலகக்கோப்பை வென்ற பிறகு, இந்திய கிரிக்கெட்டில் 'புதிய நம்பிக்கை நட்சத்திரம்' என்று கருதப்பட்ட நிலை மாறி, தற்போது பிரித்வி ஷா மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிக மோசமான நிலையில் உள்ளார். இந்நிலையில், தற்போது இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் நார்தாம்ப்டன்ஷையர் அணிக்காக ஒப்பந்தம் செய்துள்ள அவர், இந்த தொடர் தனது செயல்திறனை மீட்டெடுக்க உதவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூட ப்ரித்வி ஷா தற்போது பயப்படுகிறார்.
எண்ணங்களை பகிர்ந்து கொள்ள தயங்கும் ப்ரித்வி ஷா
ப்ரித்வி ஷா கிரிக்பஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், "நான் அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு ஃபிட்னஸ் காரணமாக இருக்கும் என்று சொன்னார்கள். அனைத்து உடற்தகுதி சோதனைகளிலும் தேர்ச்சி பெற்று அணிக்கு மீண்டும் வந்தேன். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்காக நான் யாருடனும் சண்டையிட்டு எதுவும் நடக்க போவதில்லை, நான் முன்னேறி சென்றாக வேண்டும்." என்றார். மேலும், தன்னை பற்றி பரவியுள்ள பல சர்ச்சையான விஷயங்கள் குறித்த உண்மை தன்னை அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும் எனத் தெரிவித்துள்ள ப்ரித்வி ஷா, தனக்கு நண்பர்கள் மிகவும் குறைவு என்றார். எனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டால், அது மேலும் சிக்கலை ஏற்படுத்துமோ என்ற பயத்தில் நண்பர்களிடம் கூட பல விஷயங்களை பகிர்ந்து கொள்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.