துலீப் டிராபியில் பாபா இந்திரஜித்தை புறக்கணித்ததற்கு தினேஷ் கார்த்திக் கண்டனம்
ஜூன் 28ஆம் தேதி தொடங்கும் இந்திய உள்நாட்டு கிரிக்கெட் தொடரான துலீப் டிராபியில் பங்கேற்கும் தென் மண்டல அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டர் பாபா இந்திரஜித் சேர்க்கப்படாதது குறித்து மூத்த கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கண்டித்து விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தேர்வுக்குழுவைப் பற்றி எனக்குப் புரியவில்லை. மார்ச் 2023 இல் மத்திய பிரதேசத்திற்கு எதிராக பாபா இந்திரஜித் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்காக விளையாடுகிறார். அதற்குப் பிறகு முதல் வகுப்பு போட்டிகள் எதுவும் இல்லை. ஆனால் அவர் துலீப் கோப்பையில் தென் மண்டல அணியில் இடம்பெறவில்லை. ஏன் என்று யாராவது சொல்ல முடியுமா?" என கேள்வி எழுப்பி உள்ளார்.
தென்மண்டல அணி வீரர்களின் பட்டியல்
துலீப் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்திய மற்றும் வடகிழக்கு ஆகிய வெவ்வேறு மண்டலங்களை அடிப்படையாகக் கொண்ட ஆறு அணிகள் பங்கேற்கும். ஜூன் 28 முதல் ஜூலை 16 வரை போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் மண்டல அணி : ஹனுமா விஹாரி (கேப்டன்), மயங்க் அகர்வால் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், ரிக்கி புய் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ஆர் சமர்த், வாஷிங்டன் சுந்தர், சச்சின் பேபி, பிரதோஷ் ரஞ்சன் பால், சாய் கிஷோர், வி காவேரப்பா, வி வைஷாக், கே.வி.சசிகாந்த், தர்ஷன் மிசல், திலக் வர்மா.