கவாஜா சொன்னது 100% உண்மை: பந்தை சேதப்படுத்திய சர்ச்சை குறித்து மௌனம் கலைத்த டேவிட் வார்னர்
செய்தி முன்னோட்டம்
கடந்த 2018-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப் டவுன் டெஸ்ட் போட்டியின் போது அரங்கேறிய சாண்ட்பேப்பர்கேட் பந்து சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக, ஆஸ்திரேலிய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் முதன்முறையாக மவுனம் கலைத்துள்ளார். சக வீரர் உஸ்மான் கவாஜா தனது ஸப்ர் சுயசரிதை நூலில், பந்தை சேதப்படுத்திய விவகாரம் ஆஸ்திரேலிய அணியின் ஒட்டுமொத்த வீரர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் முன்பே தெரியும் என்றும், ஆனால் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகிய மூவர் மட்டுமே பலிகடா ஆக்கப்பட்டனர் என்றும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு இன்ஸ்டாகிராமில் காணொளி வாயிலாக ஆதரவு தெரிவித்துள்ள வார்னர், கவாஜா கூறியுள்ளது நூறு சதவீதம் உண்மை எனத் தெரிவித்துள்ளார்.
விசாரணை
அவசர கதியில் முடிக்கப்பட்ட விசாரணை
கிரிக்கெட் ஆஸ்திரேலியா மேற்கொண்ட விசாரணை நேர்மையற்ற முறையில், அவசர கதியில் மூடி மறைக்கப்பட்டதாக வார்னர் கடுமையாகச் சாடியுள்ளார்.
ஓய்வறையில் பான்கிராஃப்ட்டிற்கு மிக அருகில் அமர்ந்திருந்த கவாஜாவிடம் கூட எவ்வித விசாரணையும் நடத்தப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய வார்னர், இது எத்தகைய முழுமையான விசாரணை என்று கேள்வி எழுப்பினார்.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கவாஜா உண்மைகளைப் பேசுவதைக் குறை கூறாமல், உண்மையை மறைத்தவர்களிடம் பொறுப்புக்கூறலைக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் பழைய காயங்களைக் கிளறுவது தங்களின் நோக்கமல்ல என்றும், வெளிப்படைத்தன்மையுடன் உண்மை நிலவரம் வெளிவர வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என்றும் அவர் அதில் திட்டவட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
அறிவுரை
குடும்பத்தினருக்கு ஏற்பட்ட பாதிப்பு
இந்த விவகாரம் தமக்கும் ஸ்மித், பான்கிராஃப்ட் ஆகியோரின் குடும்பத்தினருக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக வார்னர் உருக்கமாகப் பேசியுள்ளார்.
அப்போது தொலைக்காட்சியில் தாங்கள் அழுதுகொண்டே பேட்டியளித்ததன் பின்னணி குறித்துத் தனது 12 வயது மகள் ஐவி கேட்டபோது, உண்மையை அவளுக்கு விளக்க வேண்டியிருந்ததாக அவர் கூறினார்.
மேலும் பொய்கள் ஒருநாள் நிச்சயம் அம்பலமாகும் என்பதால், எப்போதுமே உண்மையை மட்டுமே பேச வேண்டும் எனத் தனது மகள்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
எத்தகைய கசப்பான நினைவுகளை மீட்டெடுத்தாலும், மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவர வேண்டியது மிகவும் அவசியமானது எனக் கூறி உஸ்மான் கவாஜாவின் தைரியமான முயற்சிக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்தார்.