
ஐபிஎல் 2025: சேப்பாக்கத்தில் 17 ஆண்டுகளாக முடியாததை சாதிக்குமா ஆர்சிபி?
செய்தி முன்னோட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) அன்று சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2025 இன் எட்டாவது போட்டியில் தங்கள் பலத்தை நிரூபிக்க தயாராகி வருகின்றனர்.
இரு அணிகளும் தங்கள் முந்தைய போட்டியில் வெற்றிகளைப் பெற்றிருப்பதால், வரவிருக்கும் போட்டி மிகவும் தீவிரமான மோதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக, சிஎஸ்கே ஆர்சிபிக்கு எதிரான போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
இரு அணிகளும் 33 ஐபிஎல் போட்டிகளில் நேருக்குநேர் மோதியில்லா நிலையில், சிஎஸ்கே 22 முறை வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் ஆர்சிபி 11 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.
சேப்பாக்கம்
சேப்பாக்கம் மைதானத்தில் ஒரே ஒரு வெற்றி
குறிப்பிடத்தக்க வகையில், ஆர்சிபி கடைசியாக 2008 ஆம் ஆண்டு தொடக்க ஐபிஎல் சீசனில்தான் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது.
அதன் பின்னர் 17 ஆண்டுகளில் அந்த மைதானத்தில் ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் போராடி வருகிறது.
இதற்கிடையே, முந்தைய ஐபிஎல் சீசனில், ஆர்சிபி குழு நிலையில் சிஎஸ்கேவை போட்டியிலிருந்து வெளியேற்றியது.
இந்த போட்டி சென்னைக்கு அதற்கு பழிவாங்க ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட், எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா போன்றவர்களும், ஆர்சிபி அணியில் விராட் கோலி, ஜோஷ் ஹேசில்வுட், லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோரும் இருப்பதால், இந்தப் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.