மிக்ஜாம் புயலால் தத்தளிக்கும் சென்னை; சிஎஸ்கேவின் வெளிநாட்டு வீரர் உருக்கமான பதிவு
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா, மிக்ஜாம் புயலால் தண்ணீரில் மிதக்கும் சென்னைக்காக தனது கவலையை தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் திங்கட்கிழமை (டிசம்பர் 4) பெய்த கனமழையால் சென்னை முழுவதும் பல பகுதிகளில் கடுமையாக தண்ணீர் தேங்கியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, தற்போது வங்கக் கடலில் சென்னைக்கு வடகிழக்கில் சுமார் 90கிமீ தூரத்தில் உள்ள புயல், செவ்வாய்க்கிழமை மதியம் நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சென்னையில் வெள்ளம் சூழ்ந்துள்ள வீடியோக்கள் வைரலாக பரவி வரும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மகேஷ் தீக்ஷனா எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரார்த்தனை செய்யும் மகேஷ் தீக்ஷனா
மகேஷ் தீக்ஷனா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எனது இரண்டாவது இல்லமான சென்னையில் இருந்து சில காட்சிகளைப் பார்த்தேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது அன்பையும் பிரார்த்தனைகளையும் அனுப்புகிறேன். உறுதியுடன் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். நாங்கள் உங்களுடன் ஒன்றாக இருக்கிறோம்." என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில், டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடக்க உள்ள ஐபிஎல் 2024 மினி ஏலத்திற்கு முன்னதாக மகேஷ் தீக்ஷனாவை சென்னை சூப்பர் கிங்ஸ் தக்க வைத்துக் கொண்டது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் ரூ.32.2 கோடி பர்ஸுடன் களமிறங்க உள்ளது.