Loading...
சாய் கிஷோர், ரபாடாவுக்கு பதில் ருதுராஜ் கெய்க்வாட்: சிஎஸ்கேவிடம் குஜராத் டைட்டன்ஸ் டீல்
சாய் கிஷோர், ரபாடாவுக்கு பதிலாக ருதுராஜை விடுவிக்க கோரி சிஎஸ்கேவுக்கு குஜராத் நிபந்தனை விதித்துள்ளது.

சாய் கிஷோர், ரபாடாவுக்கு பதில் ருதுராஜ் கெய்க்வாட்: சிஎஸ்கேவிடம் குஜராத் டைட்டன்ஸ் டீல்

எழுதியவர் Vasuki
Nov 02, 2026
02:02 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2027 சீசனுக்கான வீரர்கள் பரிமாற்ற காலக்கெடு முடிய இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே ரகசியப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில், தமிழக சுழற்பந்து வீச்சாளர் ஆர். சாய் கிஷோர் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா ஆகிய இருவரையும் சென்னை அணிக்கு விட்டுக்கொடுக்க குஜராத் முன்வந்துள்ளது. அதேசமயம், இவ்விரு வீரர்களுக்கு ஈடாக சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டைத் தங்களுக்குத் தர வேண்டும் என குஜராத் டைட்டன்ஸ் அணி நிபந்தனை விதித்துள்ளது.

சிஎஸ்கேவின் தேவை

ஜடேஜாவின் இடமும் சிஎஸ்கேவின் தேவையும்

ரவீந்திர ஜடேஜா வெளியேறிய பிறகு சிஎஸ்கே அணியில் தரமான சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இடம் நிரப்பப்படாமலேயே உள்ளது.

குஜராத் அணியில் சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர், ரஷித் கான் என வலுவான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

எனவே வாஷிங்டன் சுந்தர் அல்லது சாய் கிஷோரை விடுவிக்குமாறு சென்னை அணி பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.

இதற்குப் பதிலளித்த குஜராத், சாய் கிஷோருடன் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடாவையும் தரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது.

ஆனால், தங்கள் பலவீனமான மிடில் ஆர்டரைப் பலப்படுத்த ருதுராஜ் கெய்க்வாட்டை டிரேடிங் முறையில் சிஎஸ்கே விடுவிக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.

சிஎஸ்கேவின் முடிவு

ருதுராஜை விட்டுக்கொடுக்க சிஎஸ்கே சம்மதிக்குமா?

குஜராத் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் மட்டுமே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், மூன்றாவது வரிசையில் களமிறங்கி இன்னிங்ஸை வழிநடத்த ருதுராஜ் கெய்க்வாட் மிகச் சரியான தேர்வாக இருப்பார் என குஜராத் நிர்வாகம் கருதுகிறது.

மறுபுறம், ருதுராஜை விடுவித்தாலும் மாற்று தொடக்க வீரராக உர்வில் படேல் கைவசம் இருப்பதால், ஒரே நேரத்தில் உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரான ரபாடா மற்றும் சுழற்பந்து ஆல்ரவுண்டர் சாய் கிஷோர் கிடைப்பது அணிக்குச் சாதகமாகவே அமையும் எனச் சில கணக்குகள் போடப்படுகின்றன.

இருப்பினும், அணியின் தூணாக விளங்கும் ருதுராஜை விட்டுக்கொடுக்கும் இந்த ஒப்பந்தத்திற்கு சிஎஸ்கே தலைமை நிர்வாகம் சம்மதம் தெரிவிக்குமா என்ற உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ADVERTISEMENT

மும்பை இந்தியன்ஸ்

ஹர்திக் பாண்டியா டீலில் இருந்து விலகும் சிஎஸ்கே

இதற்கிடையே, மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியாவை வாங்க சிஎஸ்கே தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது.

ஆனால், ஹர்திக் பாண்டியாவுக்கான கிராக்கி அதிகரித்ததால், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் சிஎஸ்கேவிடம் இருந்து பதிலாக 3 முன்னணி வீரர்களைக் கேட்டு கடும் பிடிவாதம் காட்டியுள்ளது.

இதனால் கடுமையான அதிருப்தியடைந்த சென்னை அணி, ஹர்திக் பாண்டியாவை வாங்கும் பேச்சுவார்த்தையிலிருந்து முற்றிலுமாக விலக முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஹர்திக் பாண்டியாவை வாங்குவதில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்குச் செல்ல ஹர்திக் மறுப்புத் தெரிவித்ததால் அந்த அணி தானாகவே போட்டியிலிருந்து பின்வாங்கியுள்ளது.

ADVERTISEMENT