முதலமைச்சர் கோப்பை போட்டிக்கான முன்பதிவு காலக்கெடு நீட்டிப்பு; தமிழக அரசு அறிவிப்பு
முதலமைச்சர் கோப்பை போட்டிக்கு முன்பதிவு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது தமிழகம் முழுவதும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் இந்த போட்டியை நடத்தி வருகிறது. இந்த போட்டியில், கபடி, சிலம்பம் உள்ளிட்ட 15 விளையாட்டுகளில் பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள் என வெவ்வேறு பிரிவுகளில் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஒட்டுமொத்த அளவில் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்தன.
முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்கான முன்பதிவு
இந்த ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 10 அன்று தொடங்கப்பட உள்ளன. இதையொட்டி, போட்டியில் பங்குபெற விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் தங்கள் பெயர்களை ஆகஸ்ட் 25க்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வலைதளத்தில் முன்பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டது. இதற்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப முன்பதிவு செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.