விசில் போடு! டுவைன் பிராவோ கேகேஆர் அணியில் இணைவது குறித்து எக்ஸ் தளத்தில் சிஎஸ்கே பதிவு
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் வழிகாட்டியாக இணைந்துள்ளார். முன்னதாக கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் முடிந்த உடன் டுவைன் பிராவோ அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஐபிஎல்லை பொறுத்தவரை 2011 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் (சிஎஸ்கே) இருந்து வரும் பிராவோ, 2022 சீசனுடன் ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். வீரராக சிஎஸ்கே அணி மூன்று முறை ஐபிஎல் பட்டம் வெல்வதில் முக்கிய பங்கு வகித்த பிராவோ, பந்துவீச்சு பயிற்சியாளராக 2024இல் மேலும் ஒரு பட்டத்தை பெற உதவியாக இருந்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் புதிய பொறுப்பு
ஐபிஎல் தவிர, சிபிஎல், எம்எல்சி மற்றும் ஐஎல்டி20 போன்ற வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் டுவைன் பிராவோ கேகேஆர் அணியின் அந்தந்த பிரிவுகளில் விளையாடி வந்தார். இந்நிலையில், தற்போது ஓய்வுக்குப் பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சொந்தமான அனைத்து லீக் அணிகளுக்கும் டுவைன் பிராவோ வழிகாட்டியாக செயல்படுவார் என கேகேஆர் நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னதாக, தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கவுதம் காம்பிர் இந்த பொறுப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டுவைன் பிராவோ சிஎஸ்கே அணியிலிருந்து விலகுவது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சிஎஸ்கே நிர்வாகம், ""ஆடுகளத்தில் சாம்பியனிலிருந்து எங்கள் இதயங்களில் லெஜண்ட் வரை! பிராவோவின் தொழில்முறை வாழ்க்கைக்கு விசில்போடு!" என வாழ்த்தியுள்ளது.