சென்னை ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறி வைஷ்ணவி அத்கர் - ருதுஜா போசலே சாதனை
செய்தி முன்னோட்டம்
சென்னையில் நடைபெற்று வரும் டபிள்யூடிஏ சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர் மற்றும் ருதுஜா போசலே இணை இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் டபிள்யூடிஏ டூர் அளவிலான மகளிர் இரட்டையர் போட்டி ஒன்றின் இறுதி ஆட்டத்தை எட்டிய முதல் இந்திய வீராங்கனைகள் ஜோடி என்ற பெருமையை பெற்றுள்ளனர். பரபரப்பாக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் போலந்தின் வெரோனிகா ஃபால்கோவ்ஸ்கா மற்றும் அமெரிக்காவின் அலனா ஸ்மித் ஆகிய இரண்டாம் நிலை ஜோடியை எதிர்கொண்ட இந்திய இணை, முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றியது. இரண்டாவது செட்டை 2-6 என இழந்த போதிலும், வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சூப்பர் டைபிரேக்கரில் 10-8 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
வீராங்கனைகள் நெகிழ்ச்சி
சொந்த மண்ணில் சாதனை
வெற்றி குறித்துப் பேசிய ருதுஜா போசலே, "சொந்த மண்ணில் உள்ளூர் இரசிகர்களின் முன்னிலையில் இந்த மைல்கல்லை எட்டியிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது".
"இந்த வாரம் சில காயங்கள் மற்றும் உடல்நலக் குறைவால் சிரமப்பட்டாலும், பயிற்சியாளர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு எனக்குப் பேருதவியாக அமைந்தது".
"இந்த வரலாற்றுச் சாதனையை எட்டிய முதல் இந்திய இணை நாங்கள் என்பது ஆட்டம் முடியும் வரை எங்களுக்குத் தெரியாது. இது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம்" என்று தெரிவித்தார்.
மற்றொரு வீராங்கனையான வைஷ்ணவி அத்கர் பேசுகையில், "சூப்பர் டைபிரேக்கர் தருணத்தில் பதற்றமடையாமல் ஆட்டத்தை ரசித்து விளையாட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம்".
"கிடைத்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது" என்று குறிப்பிட்டார்.
இறுதிப்போட்டி
நேரலை ஒளிபரப்பும்
முன்னதாக 2005-ஆம் ஆண்டில் ஷிகா உபராய் தனது சகோதரி நேகா உபராயுடன் இணைந்து டபிள்யூடிஏ இரட்டையர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்த போதிலும், நேகா அமெரிக்கக் குடியுரிமை பெற்றவராக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது முழுமையாக இரண்டு இந்திய வீராங்கனைகள் இணைந்து இறுதி ஆட்டத்தை எட்டியிருப்பது இதுவே முதல்முறையாகும்.
பட்டத்தை வெல்லும் இறுதி ஆட்டத்தில் வைஷ்ணவி - ருதுஜா இணை, நைமா கரமோகோ மற்றும் சிமோனா வால்டர்ட் இணையை இன்று மாலை 4:00 மணியளவில் எதிர்கொள்கிறது.
இந்த இறுதிப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோஹாட்ஸ்டார் செயலியிலும் இரசிகர்கள் நேரலையாகக் கண்டு ரசிக்கலாம்.