
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி இன்று துவக்கம்
செய்தி முன்னோட்டம்
வருடம் தோறும் நடைபெறும் 'சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்' தொடரின் மூன்றாவது சீசன், திட்டமிட்டபடி நேற்று துவங்கப்படவிருந்த நிலையில், தேனாம்பேட்டை ஹயாட் ஹோட்டலில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக இன்று (ஆகஸ்ட் 7) தொடங்குகிறது. இந்த சுருக்கமான 9 நாட்கள் கொண்ட செஸ் தொடரில், மாஸ்டர்ஸ் மற்றும் சாலஞ்சர்ஸ் என இரண்டு பிரிவுகளாக மொத்தம் 20 வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு பிரிவிலும் 10 பேர் போட்டியிட உள்ளனர். மொத்தமாக ரூ.1 கோடி பரிசுத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர்ஸ் பிரிவில் முதல் இடம் பெறும் வீரருக்கு ரூ.25 லட்சம், இரண்டாம் இடத்திற்கு ரூ.15 லட்சம், மூன்றாம் இடத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
போட்டிகள்
இரண்டு பிரிவுகளாக நடைபெறும் போட்டி
மாஸ்டர்ஸ் பிரிவு: இந்தியாவின் முன்னணி கிராண்ட்மாஸ்டர்கள் அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, நிஹால் சரின் உள்ளிட்டோர்; நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜோர்டன் வான் பாரஸ்ட், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். 2024 சாலஞ்சர் பிரிவில் வெற்றிபெற்ற இந்தியாவின் பிரனவ், இந்த முறையும் பங்கேற்கிறார். சாலஞ்சர் பிரிவு: இந்தியாவின் வளர்ந்து வரும் கிராண்ட்மாஸ்டர்கள் கார்த்திகேயன் முரளி, லியோன் மென்டோன்கா, அபிமன்யு, ஆர்யன், அதிபன் பாஸ்கரன், இனியன், பிரனேஷ் ஆகியோருடன், இந்தியாவின் முன்னணி பெண்கள் வீராங்கனைகள் வைஷாலி மற்றும் ஹரிகா பங்கேற்கின்றனர்.
தீவிபத்து
தீவிபத்து மற்றும் தாமதம்
முன்னதாக, போட்டி நடைபெறவிருந்த தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் ஹோட்டலில் இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக, போட்டிகள் ஒரு நாள் தாமதமாக இன்று துவங்குகின்றன. ஹோட்டலில் தங்கியிருந்த அனைத்து வீரர்களும் பாதுகாப்பாக அருகிலுள்ள வேறு விடுதிக்கு மாற்றப்பட்டனர். இந்த தீவிபத்து குறித்து இந்திய கிராண்ட்மாஸ்டர் மற்றும் தொடரின் இயக்குநர் ஸ்ரீநாத் நாராயணன் கூறுகையில், "வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். போட்டிகள் வழக்கமான அட்டவணைப்படி நடைபெறும். ஓய்வு நாள் (11ம் தேதி) ரத்து செய்யப்பட்டுள்ளது," என்றார்.