WTC 2023 இறுதிப்போட்டி : வீரர்கள் அடுத்தடுத்து காயமடைவதால் பின்னடைவை சந்தித்துள்ள இந்திய அணி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்து வருவது அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஜூன் 7 முதல் 11 வரை ஓவலில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. போட்டி நடக்க இன்னும் ஒரு மாதத்திற்கும் மேல் உள்ள நிலையில் பிசிசிஐ இறுதிப்போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை ஏற்கனவே அறிவித்து விட்டது. இதேபோல் ஆஸ்திரேலியாவும் தங்கள் அணியை அறிவித்துள்ளது. இந்நிலையில், இரு அணியிலும் இடம் பெற்றுள்ள பல வீரர்கள் தற்போது ஐபிஎல்லில் விளையாடி வருகின்றனர்.
காயத்தில் இருந்து மீளுமா இந்திய அணி?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு (ஆர்சிபி) எதிரான ஐபிஎல் 2023 போட்டிக்கு முன்பு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. உனத்கட் தவிர, எல்எஸ்ஜி கேப்டனாக செயல்படும் கே.எல்.ராகுலின் உடற்தகுதி குறித்தும் கவலைகள் உள்ளன. ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தின் போது தொடை தசையில் காயம் அடைந்து மைதானத்தை விட்டு வெளியேறினார். இவர்கள் தவிர கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவும் காயத்தால் அவதிப்படுகின்றனர். நான்கு வீரர்கள் காயத்தில் அவதிப்படுவதால், இந்திய அணி போட்டிக்கு முன் முழு பலத்துடன் தயாராகுமா என்பதே தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.