Loading...
அனுபவத்திற்கு ஈடு இணை இல்லை! 4 வருஷத்துக்கு அப்புறம் புவனேஷ்வர் குமார் கம்பேக்! பின்னணி உடைத்த பயிற்சியாளர்
புவனேஷ்வர் குமார் கம்பேக் குறித்து பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்ஷு கோடக் விளக்கம்

அனுபவத்திற்கு ஈடு இணை இல்லை! 4 வருஷத்துக்கு அப்புறம் புவனேஷ்வர் குமார் கம்பேக்! பின்னணி உடைத்த பயிற்சியாளர்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 09, 2026
11:44 am

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், சுமார் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்திய டி20 அணிக்குத் திரும்பியுள்ளார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்காக கடந்த இரு சீசன்களில் அவர் வெளிப்படுத்திய மிகச்சிறப்பான பந்துவீச்சு மற்றும் அவரது நீண்டகால அனுபவமே இந்த கம்பேக்கிற்கு முக்கியக் காரணம் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்ஷு கோடக் தெரிவித்துள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-

ஐபிஎல் சாதனை

ஐபிஎல் தொடரில் புவனேஷ்வர் குமாரின் அபார சாதனை

கடைசியாக நவம்பர் 2022-இல் நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய புவனேஷ்வர் குமார், அதன்பின் தேசிய அணியில் வாய்ப்பின்றி இருந்தார்.

இருப்பினும், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகக் கடந்த 2025 மற்றும் 2026 சீசன்களில் அசத்தலாக பந்துவீசி 45 விக்கெட்டுகளை (2025-இல் 17 விக்கெட்டுகள், 2026-இல் 28 விக்கெட்டுகள்) வீழ்த்தினார்.

ஆர்சிபி அணியின் கோப்பை வெற்றிகளுக்கு முக்கியக் காரணமான அவரது இந்த சீரான செயல்பாடே தேர்வாளர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது.

பயிற்சியாளர் விளக்கம்

பயிற்சியாளர் சித்தான்ஷு கோடக் அளித்த விளக்கம்

ராஞ்சியில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக பேசிய பயிற்சியாளர் கோடக், "இளம் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு அணிக்குத் தேர்வாகி வருகிறார்கள்.

இருப்பினும், ஜஸ்ப்ரீத் பும்ரா இல்லாத சூழலில் அணியை வழிநடத்த அனுபவம் மிகவும் அவசியமாகிறது.

அனுபவத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை. மேலும், கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக புவனேஷ்வர் குமார் மிகச் சிறந்த முறையில் பந்துவீசி வருகிறார்.

இதுவே அவர் மீண்டும் தேர்வானதற்கான முதன்மை காரணியாகும்" என விளக்கமளித்தார்.

ADVERTISEMENT

கேள்விகள்

முகமது ஷமி மற்றும் விவிஎஸ் லட்சுமணன் பற்றிய கேள்விகள்

இதேபோல முகமது ஷமியின் கம்பேக் குறித்துக் கேட்டபோது, "நான் தேர்வாளர் இல்லை என்பதால் உறுதியாகக் கூற முடியாது.

ஆனால் ஷமியும் சிறப்பாகப் பந்துவீசி வருகிறார், அணிக்குத் தேவைப்படும் பட்சத்தில் தேர்வாளர்கள் முடிவெடுப்பார்கள்" என்றார்.

மேலும், அணி நிர்வாகத்திற்கும் தேர்வாளர்களுக்கும் இடையே காயங்கள் குறித்த தகவல்களைப் பகிர விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் குறித்துக் கேட்கப்பட்ட போது, பிசிசிஐ எடுக்கும் அனைத்து முடிவுகளும் அணியின் நலன் சார்ந்தே இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT