பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்; இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய அணியின் விளையாடும் லெவனில் மாற்றம்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்கான இரண்டாவது போட்டி அடிலெய்டில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) தொடங்க உள்ளது. பிங்க்-பால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என அழைக்கப்படும் இந்த போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. முன்னதாக, பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியில், முதல் போட்டியில் விளையாடாத கேப்டன் ரோஹித் ஷர்மா மீண்டும் அணிக்குத் திரும்பி உள்ளார். இதற்கிடையே, ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான விளையாடும் லெவன் அணியை அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியில் ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு பதிலாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு
கடந்த ஆஷஸுக்குப் பிறகு முதல் முறையாக, கிட்டத்தட்ட 18 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விளையாடும் லெவனில் ஸ்காட் போலண்ட் சேர்க்கப்படுவதாக கம்மின்ஸ் குறிப்பிட்டார். பெர்த் தொடக்க ஆட்டத்தில் 295 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பின்னர், பகல்-இரவு போட்டியில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரை சமன் செய்ய ஆஸ்திரேலிய அணி எதிர்பார்க்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடும் லெவன் அணியில் காயமடைந்த ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு பதிலாக போலண்ட் இடம் பெறுவார். ஆஸ்திரேலியா விளையாடும் லெவன்: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஸ்காட் போலண்ட்.