பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு இமாலய வெற்றி இலக்கு; 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்
பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. எனினும், முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு சுருண்டது. இளம் ஆல்ரவுண்டர் நிதிஷ் ரெட்டி அதிகபட்சமாக 41 ரன்களை எடுத்தார். ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மறுபுறம், ஆஸ்திரேலியாவும் முதல் இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு சுருண்டது. சிறப்பாக பந்துவீசிய ஜஸ்ப்ரீத் பும்ரா 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
விராட் கோலி சதம்
முதல் இன்னிங்ஸ் முடிவில் 46 ரன்கள் முன்னிலை முற்ற இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி ரன் குவித்தது. தொடக்க ஜோடியான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 161 ரன்களும், கே.எல்.ராகுல் 77 ரன்களும் எடுத்த நிலையில், விராட் கோலி 100 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார். 487 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இருந்த நிலையில், இந்திய அணி டிக்ளேர் செய்து, 534 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த நிலையில் உள்ளது. ஜஸ்ப்ரீத் பும்ரா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.