பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: 45 ஆண்டுகளில் இரண்டாவது முறை; மோசமான சாதனை படைத்தது ஆஸ்திரேலியா
பெர்த்தில் நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. முன்னதாக, வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. எனினும், சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல் டக்கவுட் ஆன நிலையில்,விராட் கோலி 5 ரன்களில் அவுட்டானார். நிதிஷ் ரெட்டி அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்த நிலையில், ரிஷப் பண்ட் 37 ரன்களும், கே.எல்.ராகுல் 26 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை ஓரளவு உயர்த்தினர்.
ஜஸ்ப்ரீத் பும்ரா பந்துவீச்சு அபாரம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் ஜோஷ் ஹேசில்வுட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய ஆஸ்திரேலியா இந்திய அணியின் அபார பந்துவீச்சில் மளமளவென விக்கெட்டுகளை இழந்து, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களுடன் உள்ளது. இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதற்கிடையே, ஆஸ்திரேலியா உள்ளூர் டெஸ்டில் 1980க்கு பிறகு இரண்டாவது முறையாக ஒரு இன்னிங்ஸின் முதல் 5 விக்கெட்டுகளை 40 ரன்களுக்குள் இழந்துள்ளது.