ஒருநாள் உலகக்கோப்பைக்கான இரண்டாம் கட்ட டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்
அக்டோபர்-நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கான டிக்கெட் விற்பனையின் இரண்டாம் கட்டம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 8) தொடங்க உள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இதற்கான முதற்கட்ட டிக்கெட் விற்பனை கடந்த ஆகஸ்ட் இறுதியில் தொடங்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக விற்கப்பட்டன. இந்த டிக்கெட் விற்பனை முழுவதும் BookMyShow தளத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ரசிகர்கள் ஒரே நேரத்தில் தளத்தில் குவிந்ததால், வலைதளம் முடங்கி டிக்கெட் விற்பனையில் சிக்கல் ஏற்பட்டதாக அப்போது விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக கூடுதலாக 4,00,000 டிக்கெட்டுகளை விநியோகம் செய்வதாக பிசிசிஐ அறிவித்தது.
ஐசிசியுடன் இணைந்து டிக்கெட் விற்பனை செய்யும் பிசிசிஐ
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 8) இரவு 8 மணி முதல் இரண்டாம் கட்ட டிக்கெட் விற்பனை தொடங்கும் என அறிவித்துள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), இதில் 4 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது. இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "போட்டியை நடத்தும் மாநில சங்கங்களுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு, ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கான சுமார் 4,00,000 டிக்கெட்டுகளை வெளியிடுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த வரலாற்று நிகழ்வில் ஆர்வமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பங்கேற்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளது.