LOADING...
ஐபிஎல் அணிகளுக்கு செக் வைத்த பிசிசிஐ! இனி ஒரே பிட்ச்சில் பயிற்சி செய்ய முடியாது; மைதான பராமரிப்பில் அதிரடி மாற்றம்
ஐபிஎல் 2026 தொடரில் வலைப்பயிற்சி மற்றும் ஆடுகள பராமரிப்பிற்குப் புதிய கட்டுப்பாடுகள் விதித்தது பிசிசிஐ

ஐபிஎல் அணிகளுக்கு செக் வைத்த பிசிசிஐ! இனி ஒரே பிட்ச்சில் பயிற்சி செய்ய முடியாது; மைதான பராமரிப்பில் அதிரடி மாற்றம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 13, 2026
09:46 am

செய்தி முன்னோட்டம்

மார்ச் 28 அன்று தொடங்கவுள்ள ஐபிஎல் 2026 சீசனுக்காக, பிசிசிஐ மிகக் கடுமையான பயிற்சி விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் தொடரின் இறுதிக்கட்டத்தில் ஆடுகளங்கள் மோசமடைவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, எதிரெதிர் அணிகள் இனி ஒரே பயிற்சி ஆடுகளத்தைப் பகிர்ந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு அணிக்கும் தனித்தனி பயிற்சி பிட்ச்கள் தயார் செய்யப்பட வேண்டும். இரண்டு அணிகள் ஒரே நேரத்தில் பயிற்சி செய்தாலும், அவர்கள் ஒருவருக்கொருவர் பிட்ச்களை மாற்றிக் கொள்ளவோ அல்லது பகிர்ந்துகொள்ளவோ அனுமதி கிடையாது. 'Open Nets' எனப்படும் திறந்தவெளி வலைப்பயிற்சி முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

முக்கிய ஆடுகளம்

முக்கிய ஆடுகளத்திற்கான புதிய கட்டுப்பாடுகள்

மைதானத்தின் பிரதான ஆடுகளத்தைப் பாதுகாக்கப் பின்வரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன: ஒரு அணி தனது முதல் உள்ளூர் போட்டியை விளையாடுவதற்கு 4 நாட்களுக்கு முன்பிருந்து, அந்த மைதானத்தின் மெயின் ஸ்குயரில் பயிற்சி செய்ய அனுமதி கிடையாது. போட்டி நடைபெறும் நாட்களில் மெயின் ஸ்குயரில் உடற்தகுதி தேர்வுகளோ அல்லது இதர பயிற்சிகளோ நடத்தக் கூடாது. ரேஞ்ச் ஹிட்டிங், பந்துவீச்சு ரன்-அப் பயிற்சிகள் போன்றவை மெயின் ஸ்குயரின் ஓரங்களில் உள்ள ஆடுகளங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

நிபந்தனைகள்

பயிற்சி போட்டிகளுக்கான நிபந்தனைகள்

விளக்குகளின் கீழ் பயிற்சி போட்டிகளை நடத்த பிசிசிஐயிடம் அனுமதி பெற வேண்டும். இந்தப் போட்டிகள் 3.5 மணி நேரத்திற்கு மேல் நீடிக்கக் கூடாது. ஒரு அணி தொடர் தொடங்குவதற்கு முன்பு அதிகபட்சமாக 2 பயிற்சி போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும். கடந்த 2025 சீசனில், பல மைதானங்களில் ஆடுகளங்கள் தொடரின் பாதியிலேயே மென்மையாகவும், சீரற்ற தன்மையுடனும் மாறியதாக விமர்சனங்கள் எழுந்தன. ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு உள்நாட்டுப் போட்டிகள் அதிகளவில் அங்கு நடப்பதே இதற்குக் காரணம். எனவே, ஆடுகளங்களின் ஆயுளைக் கூட்டவும், விறுவிறுப்பான ஆட்டங்களை உறுதி செய்யவும் பிசிசிஐ இந்த சீசனில் அதிக கவனம் செலுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement