கிரிக்கெட் ரசிகர்களுக்குச் சர்ப்ரைஸ்! சீக்கிரமாகவே தொடங்கும் ஐபிஎல் 2027? பிசிசிஐ புதிய வியூகம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தை விறுவிறுப்பாக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரின் கால அட்டவணையில், வரும் 2027 ஆம் ஆண்டு முதல் முக்கிய மாற்றங்களை செய்ய இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தீவிரமாக ஆலோசித்து வருகிறது. வழக்கமாக மார்ச் மாத இறுதியில் தொடங்கி மே மாத இறுதி வரை நடக்கும் இந்தத் தொடரை, இனி வரும் காலங்களில் மார்ச் 10 ஆம் தேதியே தொடங்கி மே 15 ஆம் தேதிக்குள் நிறைவு செய்யப் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. மே மாதத்தின் பிற்பாதியில் நிலவும் அதீத வெப்பம் மற்றும் பருவமழை பாதிப்புகளில் இருந்து வீரர்களையும் ரசிகர்களையும் பாதுகாப்பதே இம்மாற்றத்தின் முதன்மை நோக்கமாகும்.
காரணங்கள்
கடுமையான கோடை வெயில் மற்றும் முன்கூட்டிய பருவமழை சவால்
இதுகுறித்து பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "நடப்பு ஆண்டில் ஐபிஎல் தொடர் மார்ச் 29 இல் தொடங்கி மே 31 வரை நடைபெற்றது. ஆனால், மே 15 ஆம் தேதிக்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளில் முன்கூட்டிய பருவமழை அல்லது கடுமையான கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இது வீரர்களின் சிறப்பான ஆட்டத்திற்கும், மைதானத்திற்கு வரும் ரசிகர்களுக்கும் உகந்ததாக இல்லை. எனவே, போட்டிகளை இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே தொடங்குவது குறித்து ஐபிஎல் கவர்னிங் கவுன்சில் ஆலோசித்து வருகிறது." என்று தெரிவித்துள்ளார்.
போட்டிகளின் எண்ணிக்கை
போட்டிகளின் எண்ணிக்கை 94 ஆக உயருமா? பிசிசிஐ விளக்கம்
ஐபிஎல் தொடரில் அணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், போட்டிகளின் எண்ணிக்கையை 74 இல் இருந்து 94 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுந்து வந்தன. இதுகுறித்த கேள்விக்குத் தெளிவுபடுத்திய தேவஜித் சைகியா, சர்வதேச கிரிக்கெட் அட்டவணை மிகவும் நெருக்கமாக இருப்பதால், தற்போதைக்கு ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எண்ணம் பிசிசிஐக்கு இல்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். பிற நாடுகளின் இருதரப்புத் தொடர்களைப் பாதிக்காத வகையில் இரண்டு மாத கால வரம்பிற்குள் மட்டுமே ஐபிஎல் நடத்தப்பட வேண்டும் என்பதில் வாரியம் உறுதியாக உள்ளது.
உள்நாட்டு போட்டிகள்
உள்நாட்டு கிரிக்கெட் அட்டவணையை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம்
ஐபிஎல் தொடரை மார்ச் தொடக்கத்திலேயே கொண்டு வர வேண்டுமானால், இந்தியாவின் ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களின் கால அட்டவணையை முழுமையாக மாற்றியமைக்க வேண்டியிருக்கும். தற்போது ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கி மார்ச் மாதம் வரை நீளும் உள்நாட்டுப் போட்டிகளை, பிப்ரவரி இறுதிக்குள்ளேயே முடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை பிசிசிஐ ஆராய்ந்து வருகிறது. இதன் மூலம் மட்டுமே உள்நாட்டு வீரர்களுக்கு எவ்வித பணிச்சுமையும் இன்றி ஐபிஎல் தொடருக்குள் சுமூகமாக நுழைய வழிவகை ஏற்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.