வயது மோசடி! இந்திய யு19 சுழற்பந்து வீச்சாளர் ரோஹித் யாதவுக்கு பிசிசிஐ 2 ஆண்டுகள் தடை
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வயது மோசடி காரணமாக இந்திய யு19 அணியின் இளம் லெக் ஸ்பின்னரான ரோஹித் யாதவுக்கு 2 ஆண்டுகள் அதிரடித் தடை விதித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய யு19 அணியில் இடம்பெற்றிருந்த ரோஹித் யாதவ், வரும் செப்டம்பர் இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் விளையாட இருந்த நிலையில், தற்போது இந்த தடையின் காரணமாக உடனடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-
வயது சரிபார்ப்பு
வங்காளக் கிரிக்கெட் சங்கத்தின் சான்றிதழ் சரிபார்ப்பு
வங்காளத் தொடரில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த ரோஹித் யாதவின் ஆவணங்களை, வங்காள கிரிக்கெட் சங்கம் சீசனுக்கு முந்தைய சரிபார்ப்பின் போது தீவிரமாக ஆய்வு செய்தது.
அப்போது அவரது உண்மையான வயதிற்கும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட வயதிற்கும் இடையே சுமார் 27 மாதங்கள் வித்தியாசம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு, அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் பிசிசிஐ தகவல் அனுப்பியுள்ளது.
முன்னால வீரர்
முன்னாள் உலகக்கோப்பை வீரர் ரவி குமார் உட்பட 64 வீரர்கள் சஸ்பெண்ட்
ரோஹித் யாதவ் தவிர, இதே போன்ற வயது மோசடி விவகாரத்தில் மேலும் 64 வீரர்களுக்கு வங்காள கிரிக்கெட் சங்கம் தடை விதித்துள்ளது.
இதில் 2022 ஆம் ஆண்டு இந்திய யு19 உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ரவி குமாரும் அடங்குவார்.
ரவி குமாரின் வயதில் 40 மாதங்கள் வரை வேறுபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அவரது அறிமுகப் போட்டி முதல் 2025-26 சீசன் வரையிலான அனைத்துப் போட்டிப் பதிவுகளும் செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தீவிர நடவடிக்கை
வயது மோசடிக்கு எதிரான பிசிசிஐயின் தீவிர நடவடிக்கை
இந்தியக் கிரிக்கெட்டில் இளையோர் பிரிவில் நிலவும் வயது மோசடிகளைத் தடுக்க பிசிசிஐ தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
2020 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பொது மன்னிப்புத் திட்டத்தின் மூலம், வீரர்கள் தாங்களாகவே முன்வந்து உண்மையான வயதைத் தெரிவித்தால் தடையிலிருந்து தப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டது.
ஆனால், தவறான விவரங்களை மறைக்கும் வீரர்களுக்குக் கடுமையான தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது பிறப்புச் சான்றிதழுடன் கல்விச் சான்றிதழ்களையும் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.