ஐபிஎல்லை நிராகரித்ததற்காக வீரர்களுக்கு சன்மானம் வழங்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியம்
ஐபிஎல் 2023 இல் விளையாடுவதற்குப் பதிலாக தங்கள் நாட்டு தேசிய அணிக்காக விளையாட முடிவு செய்ததற்காக வங்கதேச கிரிக்கெட் அணியை சேர்ந்த மூன்று மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கு மொத்தமாக சுமார் ₹50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் திங்களன்று (ஜூலை 3) தெரிவித்துள்ளது. வீரர்கள் தங்களிடம் இதுகுறித்து கோரிக்கை எதுவும் வைக்கவில்லை என்றாலும், ஐபிஎல்லில் அவர்கள் இழக்கும் தொகையை முழுமையாக ஈடுசெய்ய முடியாவிட்டாலும், முடிந்தவரை கொடுக்க வேண்டும் என முடிவு செய்து இதை அறிவித்ததாக வங்கதேச கிரிக்கெட் வாரிய சிஇஓ ஜலால் யூனுஸ் தெரிவித்துள்ளார். ₹50 லட்சம் சன்மானத்தை ஷாகிப் அல் ஹசன், தஸ்கின் அகமது மற்றும் லிட்டன் தாஸ் ஆகிய மூன்று வீரர்கள் தங்களுக்கிடையே பிரித்துக் கொள்வார்கள்.
ஐபிஎல்லில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள்
ஷாகிப் அல் ஹசன் இந்த ஆண்டு ஐபிஎல்லுக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஆனால், அயர்லாந்திற்கு எதிரான தொடருக்காக பாதியில் வெளியேறினார். இந்த சீசனில் ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தனது முதல் அழைப்பைப் பெற்ற லிட்டன் தாஸ், அயர்லாந்து டெஸ்டுக்கு பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு திரும்பினாலும், ஒரே ஒரு போட்டியில் விளையாடிவிட்டு மீண்டும் நாடு திரும்பிவிட்டார். ஐபிஎல் ஏலத்தில் தஸ்கின் அகமது விற்கப்படவில்லை என்றாலும், காயத்திற்குப் பதிலாக மாற்று வீரராக களமிறங்க வாய்ப்பு கிடைத்தும் தேசிய அணிக்காக விளையாட அதை நிராகரித்ததாக தெரிகிறது. முஸ்தாபிசுர் ரஹ்மான் மட்டுமே இந்த சீசனில் தனது ஐபிஎல் அணியுடன் நீண்ட காலம் விளையாடும் வாய்ப்பைப் பெற்ற ஒரே வங்கதேச வீரர் ஆவார்.