'நாங்க ஆட ஆசைப்பட்டோம்.. ஆனா!' வங்கதேச கிரிக்கெட் வீரர்களின் குமுறல்! அரசாங்கத்தின் உத்தரவால் உலகக்கோப்பை கனவு சிதைந்ததா?
செய்தி முன்னோட்டம்
2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சென்று விளையாட வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள், குறிப்பாக கேப்டன் லிட்டன் தாஸ் மற்றும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆகியோர் மிகுந்த விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், வங்கதேச கிரிக்கெட் வாரியம் வீரர்களிடம் கருத்து கேட்பதற்குப் பதிலாக, தங்களது முடிவை அவர்கள் மீது திணித்துள்ளதாக கிரிக்பஸ் தளம் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், வீரர்கள் தங்கள் தரப்பு நியாயத்தைக் கூற வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அங்கு நடந்தது வேறு எனக் கூறப்படுகிறது.
கூட்டம்
கூட்டத்தில் பேசப்பட்டவை
கூட்டத்தில் வீரர்கள் பேச அனுமதிக்கப்பட்டாலும், அவர்களது கருத்துக்கள் எதையும் வாரியம் காதுகொடுத்துக் கேட்கவில்லை. இந்தியாவுக்குச் செல்லப் போவதில்லை என்ற முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டது, அதை வீரர்களுக்குத் தெரிவிக்கவே அந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. "எங்களிடம் சம்மதம் கேட்கவில்லை, மாறாக என்ன நடக்கப்போகிறது என்பதைத் தகவல் தெரிவிக்கவே எங்களை அழைத்தனர்" என்று பெயர் குறிப்பிட விரும்பாத வீரர் ஒருவர் குமுறியுள்ளார்.
உத்தரவு
இடைக்கால அரசாங்கத்தின் நேரடி உத்தரவு
வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் இந்தத் திடீர் முடிவுக்குப் பின்னால் அந்நாட்டில் தற்போது பொறுப்பில் உள்ள இடைக்கால அரசாங்கத்தின் நேரடித் தலையீடு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியாவுடனான அரசியல் உறவு சுமுகமாக இல்லாத காரணத்தால், இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம் என்பது அரசாங்கத்தின் நேரடி உத்தரவாக வாரியத்திற்கு வந்துள்ளது. பழைய சம்பவங்கள் மற்றும் வீரர்களின் பாதுகாப்பைச் சுட்டிக்காட்டி வீரர்களைப் பணிய வைக்க வாரியம் முயன்றுள்ளது. பிசிசிஐ தரப்பிலிருந்து தங்களுக்கு முறையான அழைப்பு அல்லது தகவல் வரவில்லை என்று வங்கதேச வாரியம் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், ஐசிசி இந்த விவகாரத்தில் சமரசம் செய்யத் தயாராக இல்லை. அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று உறுதிபடத் தெரிவித்துள்ள ஐசிசி, வங்கதேசத்திற்குப் பதில் ஸ்காட்லாந்து அணியை களமிறக்குவதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளது.