BANvsNED : வங்கதேசத்தை வாரிச்சுருட்டிய நெதர்லாந்து; 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் சனிக்கிழமை (அக்டோபர் 28) நடந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணி வங்கதேசத்தை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த நெதர்லாந்து கிரிக்கெட் அணி 50 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து அணியில் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் அரைசதம் அடித்து அணியில் அதிகபட்சமாக 68 ரன்களும், வெஸ்லி பாரேசி 41 ரன்களும் எடுத்தனர். வங்கதேச அணியில் சிறப்பாக பந்துவீசிய மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
வங்கதேசம் 142 ரன்களுக்கு ஆல் அவுட்
230 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச கிரிக்கெட் அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில், மூன்றாவது இடத்தில் களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ் சற்று தாக்குப் பிடித்து 35 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து வந்தவர்கள் அடுத்தடுத்து அவுட்டான நிலையில், 70 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மேலும், 42.2 ஓவர்களில் வங்கதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் நெதர்லாந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.