BANvsAFG: 335 இலக்கை எளிதாக டிஃபெண்டு செய்து முதல் வெற்றியைக் கைப்பற்றியது வங்கதேசம்
ஆசிய கோப்பைத் தொடரில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதிய இன்றைய போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 334 ரன்களைக் குவித்தது. வங்கதேச அணியின் மெஹிடி ஹாசன் மற்றும் நஜ்முல் ஷான்டோ ஆகிய வீரர்கள் சதமடிக்க, ஆப்கானுக்கு 335 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம். வங்கதேசத்தைத் தொடர்ந்து ஆடிய ஆஃப்கான் அணியில், ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஸாத்ரான் ஆகிய வீரர்கள் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். இரண்டாவது ஓவரிலேயே எல்பிடபிள்யூவாகி அதிர்ச்சியளித்தார் குர்பாஸ். அதன் பின்பு களமிறங்கிய ரஹ்மத் ஷா மற்றும் ஷாகிடி ஆகியோருடன் இணைந்து பொறுமையான ஆட்டத்தைக் கடைப்பிடித்தார் ஸாத்ரான்.
மெதுவாக ரன்களைச் சேர்ந்த ஆஃப்கானிஸ்தான்:
தொடக்க ஆட்டக்காரரான ஸாத்ரான் 75 ரன்களில் ஆட்டமிழக்க, நான்காவதாக ஆடிய ஷாகிடி அரைசதத்தைக் கடந்து ஆட்டமிழந்தார். 35வது ஓவர் வரை 200க்கு குறைவான ரன்களைக் குவித்திருந்தாலும், 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது ஆஃப்கானிஸ்தான். ஆனால், 35 ஓவருக்குப் பிறகு மடமடவென விக்கெட்டுகள் சரிய அடுத்த ஐந்து ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தத்தளிக்கத் தொடங்கியது ஆஃப்கான். இறுதியில் 44.3 ஓவர்களுக்கு 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது ஆஃப்கானிஸ்தான். 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வங்கதேச அணி. இலங்கை மற்றும் ஆஃப்கான் அணிகளுக்கிடையேயான போட்டியின் முடிவுகளைப் பொறுத்து B பிரிவில் முதலிரண்டு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.