AUSvsSA Semifinal : மழை தொடர்ந்து போட்டி ரத்தானால் அடுத்து என்ன நடக்கும்? ஐசிசி விதிகள் இதுதான்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இரண்டாவது போட்டியில் வியாழக்கிழமை (நவம்பர் 16) தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வரும் இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி பேட்டிங்கை தொடங்கிய உடனே அதிர்ச்சி கொடுத்த ஆஸ்திரேலியா அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதால் திணறி வருகிறது. இதற்கிடையே, 14வது ஓவரின் முடிவில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் சிறிதுநேரம் தடைபட்டு பின்னர் மீண்டும் நடந்து வருகிறது. இந்நிலையில் போட்டி மழையால் முடிக்க முடியாமல் போனால் யாருக்கு வெற்றி என்பதை இதில் பார்க்கலாம்.
ஐசிசி விதிகள்
மழை அல்லது வேறு ஏதேனும் தவிர்க்க முடியாத காரணங்களால் போட்டியை முடிக்க முடியாவிட்டால், கூடுதலாக ஒருநாள் ரிசர்வ் நாளாக வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, திட்டமிடப்பட்ட நாளில் போட்டியை முடிக்க முடியாமல் போனால், ரிசர்வ் நாளில் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் ஆட்டம் தொடங்கி நடக்கும். எனினும், 2 மணி நேரங்களுக்கு மேல் ஆட்டம் தடைபட்டாலும், ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டியை திட்டமிடப்பட்ட நாளில் முடிக்கவே முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதேநேரம், ரிசர்வ் நாளிலும் போட்டியை முழுமையாக விளையாட முடியாமால் போனால், புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருக்கும் அணி நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும். அந்த வகையில், ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.