LOADING...
டி20 உலகக் கோப்பை 2026: ஆஸ்திரேலியாவிற்கு 'அவுட்'! சூப்பர் 8 சுற்றுக்கு கெத்தாக நுழைந்த ஜிம்பாப்வே
டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் சுற்றிலேயே வெளியேறியது ஆஸ்திரேலியா

டி20 உலகக் கோப்பை 2026: ஆஸ்திரேலியாவிற்கு 'அவுட்'! சூப்பர் 8 சுற்றுக்கு கெத்தாக நுழைந்த ஜிம்பாப்வே

எழுதியவர் Venkatalakshmi V
Feb 17, 2026
06:01 pm

செய்தி முன்னோட்டம்

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் கிரிக்கெட் ரசிகர்களை அதிர வைக்கும் ஒரு திருப்பமாக, பலமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டுள்ளது. இன்று(பிப். 17) நடைபெற்ற அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, ஜிம்பாப்வே அணி அதிகாரப்பூர்வமாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. கடந்த 2009-ஆம் ஆண்டிற்கு பிறகு, ஆஸ்திரேலிய அணி ஒரு டி20 உலகக்கோப்பையின் முதல் சுற்றிலேயே வெளியேறுவது இதுவே முதல் முறையாகும். இந்த தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலியா, இரண்டில் தோல்வியை தழுவியது. முதலில் ஜிம்பாப்வே அணியிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. பின்னர் இலங்கையிடம் தோல்வியுற்று வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது.

சாதனை

ஜிம்பாப்வேயின் வரலாற்று சாதனை

இந்த தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத ஜிம்பாப்வே அணி, 5 புள்ளிகளுடன் குரூப் 'பி' பிரிவில் இருந்து சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் சூப்பர் 8 சுற்றின் 'குரூப் 1'-இல் அந்த அணி நுழைகிறது. அங்கு ஜிம்பாப்வே அணி, இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய வலுவான அணிகளுடன் மோத உள்ளது. அதே சமயம், இன்று ஜிம்பாப்வே - அயர்லாந்து போட்டி மழையினால் கைவிடப்பட்டதால், அயர்லாந்து அணியும் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகிய இரு அணிகள் இந்தப் பிரிவிலிருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

Advertisement