LOADING...
97 ஆண்டு கால வரலாற்றில் கரும்புள்ளி: ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் மோசமான பேட்டிங் சாதனை; ரசிகர்கள் அதிர்ச்சி
ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலியா மோசமான சாதனை

97 ஆண்டு கால வரலாற்றில் கரும்புள்ளி: ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் மோசமான பேட்டிங் சாதனை; ரசிகர்கள் அதிர்ச்சி

எழுதியவர் Sekar Chinnappan
Dec 27, 2025
12:07 pm

செய்தி முன்னோட்டம்

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி மிகவும் மோசமான பேட்டிங் சாதனையைப் பதிவு செய்துள்ளது. 97 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து மிகக் குறைந்த பந்துகளை மட்டுமே ஆஸ்திரேலிய வீரர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

ஆடுகளம்

பேட்ஸ்மேன்களுக்கு சவாலான ஆடுகளம்

இந்தத் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு அதிக சாதகமாக இருந்ததால், பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க முடியாமல் திணறினர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தனது முதல் இன்னிங்ஸில் 152 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 132 ரன்களும் மட்டுமே எடுத்தது. இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து ஆஸ்திரேலியா வெறும் 79.5 ஓவர்கள் (479 பந்துகள்) மட்டுமே விளையாடியது. இது 1928 ஆம் ஆண்டுக்குப் பிறகு (457 பந்துகள்) ஆஸ்திரேலியா ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் எதிர்கொண்ட மிகக் குறைந்த பந்துகள் என்ற மோசமான சாதனையாகும். 1900 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியா எதிர்கொண்ட நான்காவது மிகக் குறைந்த பந்து எண்ணிக்கை இதுவாகும்.

30 விக்கெட்டுகள்

5 செஷன்களில் 30 விக்கெட்டுகள் வீழ்ச்சி

பொதுவாக ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டி, இந்த முறை இரண்டாவது நாளிலேயே முடிவுக்கு வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆட்டம் தொடங்கி ஐந்து செஷன்களுக்குள் (சுமார் 98 ஓவர்கள்) மொத்தம் 30 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன. ஆடுகளத்தின் மோசமான நிலை குறித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சித்துள்ளார். "இந்த ஆடுகளம் ஒரு நகைச்சுவை; இது ரசிகர்களையும் ஒளிபரப்பாளர்களையும் ஏமாற்றும் செயல்" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு இந்த டெஸ்டில் வெற்றி பெற 175 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement