வெறித்தனம்; டி20 பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை படைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
ஸ்காட்லாந்து நாட்டில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டி20 போட்டிகளில் அதிக பவர்பிளே ஸ்கோரை அடித்து சாதனை படைத்தது. ஆஸ்திரேலிய அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களைக் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஃபிரேசர் டக்கவுட் ஆகி வெளியேறினாலும், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷுடன் இணைந்து ரன் மழை பொழிந்தார். பவர்பிளேவில் டிராவிஸ் ஹெட் 22 பந்துகளில் 73 ரன்களும் மிட்செல் மார்ஷ் 11 பந்துகளில் 39 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் பவர்பிளே ஓவர்களில் அதிக ரன் குவித்த அணி என்ற சாதனை படைத்ததோடு, 100க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்த 2வது அணியாக ஆஸ்திரேலியா ஆனது.
டி20 பவர்பிளேயில் அதிக ரன்கள்
டி20 கிரிக்கெட்டில் தற்போதைய ஆஸ்திரேலியாவின் சாதனைக்கு முன்னதாக 2023இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி விக்கெட் இழப்பின்றி 102 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச சாதனையாக இருந்தது. அதற்கு அடுத்த இடத்தில் 2021இல் இலங்கைக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் குவித்த ஆட்டம் உள்ளது. இதில் 132 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் பவர்பிளேயில் மட்டுமே 98/4 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்த இடத்தில் 2020இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அயர்லாந்து கிரிக்கெட் அணி விக்கெட் இழப்பின்றி 93 ரன்கள் குவித்த ஆட்டம் உள்ளது.