பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரே நாளில் நான்கு தங்கம் வென்ற இந்தியா
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா முதல் நாளில் 4 தங்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) நடந்த பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க நிகழ்ச்சிக்கு பிறகு, திங்கட்கிழமை போட்டி தொடங்கியது. இந்நிலையில், போட்டியின் முதல் நாளான திங்கட்கிழமை, ஆடவர் கிளப் த்ரோ எப்51 போட்டியில் இந்தியா சார்பாக போட்டியில் பிரணவ் சூர்மா தங்கம், தரம்பீர் வெள்ளி மற்றும் அமித் குமார் வெண்கலம் வென்றனர். நட்சத்திர துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா மகளிர் ஆர்2 10மீ ஏர் ரைபிள் ஸ்டேண்டிங் எஸ்எச்1 பிரிவில் 249.6 என்ற புள்ளிகளுடன் தங்கம் வென்று வரலாறு படைத்தார்.
உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு வெண்கலம்
ஆடவருக்கான உயரம் தாண்டுதல் டி63 பிரிவிலும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்களையும் இந்திய விளையாட்டு வீரர்கள் கைப்பற்றினர். இதில் ஷைலேஷ் குமார் தங்கம் வென்றார். தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு வெள்ளியும், கோவிந்த்பாய் ராம்சிங்பாய் பதியார் வெண்கலமும் வென்றனர். ஆடவருக்கான உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் இந்தியாவின் நான்காவது தங்கப்பதக்கத்தை நிஷாத் குமார் வென்றார். இதே பிரிவில் ராம் பால் வெண்கலம் வென்றார். மேலும் ஆண்களுக்கான ஷாட் புட் எப்11 போட்டியில் மோனு கங்காஸ் வெண்கலப் பதக்கம் வென்றார். பெண்களுக்கான கேனோ விஎல்2 போட்டியில் பிராச்சி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.