ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் அடுத்தடுத்து தங்கம் வென்ற இந்திய வீரர்கள்
சீனாவின் ஹாங்சோவில் புதன்கிழமை (செப்டம்பர் 27) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி 2023ல் மகளிருக்கான துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் ரைபிள் 3-நிலை தனிநபர் பிரிவில் சிஃப்ட் கவுர் சாம்ரா மற்றும் ஆஷி சௌக்சே ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெண்கலம் வென்றனர். இந்திய வீராங்கனை சிஃப்ட் கவுர் சாம்ரா தனது இறுதி ஷாட்டில் சீன துப்பாக்கி சுடும் வீராங்கனை ஜாங் கியோங்யூவை விட 8.9 என்ற புள்ளிகள் முன்னிலை பெற்று தங்கம் வென்றார். சாம்ரா 469.6 புள்ளிகளை பெற்று உலக சாதனையும் படைத்தார். சீன வீராங்கனை ஜாங் 462.3 புள்ளிகளை பெற்று வெள்ளியும், சௌக்சே 451.9 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.
துப்பாக்கிச் சுடுதலில் அடுத்தடுத்து பதக்கம் வென்ற இந்தியா
முன்னதாக, பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் குழு போட்டியில் மனினி கௌசிக் உடன் சாம்ரா மற்றும் சௌக்சி இணைந்து வெள்ளிப் பதக்கம் வென்றனர். இதற்கிடையே, 25 மீட்டர் பிஸ்டல் போட்டியில் மனு பாஹர், ரிதம் சங்வான், இஷா சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கம் வென்றது. மேலும், ஆடவர் டிங்கி ஐஎல்சிஏ 7 பாய்மரப் படகு போட்டியில் இந்தியாவின் விஷ்ணு சரவணன் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இதன் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டியின் மூன்றாவது நாளில் இந்தியா தற்போது 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 9 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.